விடியலின் நாயகனைத் தேடி வீரமங்கைகள் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர்..!

அன்று...

சீதனத்தின் கொடுமையினால்
சிதைக்கப்பட்டது யாழ் மண்..
சித்திரம்போல் அழகிருந்தும் ..
உத்தமியாய்க் குணமிருந்தும்..

சீதனம் இல்லையெனில்
செங்காய்கள்பழுக்காது எனும் நிலையில் ..
சில்வண்டு வந்து தீண்டாமல்
செம்மலர்கள் வாடிய காலம் அது..!

 ஓட்டு   வீட்டுக்கும் ஒன்பது லெட்சம்
காசுக்கும் கூட
செவ்வாழைக் கைகளில் இருந்த
சீதனப் பூட்டுக்களை .சமூகப்பேய்கள்
உடைக்க மறுத்த காலம் அது..!

நோட்டு நோட்டாய்ப் பணம் கொடுத்தாலும்
கோட்டுப்போட்ட கோமான்களுக்கு
விலையோ.. விசம்போல் ஏறிக்கொண்டிருந்தது..!
காகத்தின்..
கூடுகளைத் தேடி குயில்கள் முட்டையிட
ஓடிய காலம் ..
ஈழ வரலாற்றின்..இரும்புக்காலம்..!

'செம்பாட்டுத்தரையில்' ஐந்தேக்கர்..
'கலட்டித் தரையில்'மூன்றேக்கர்
லண்டன் 'மொரிஸ் ஒக்ஸ்போர்ட்' காரும்
இருபது லெட்சம் நோட்டுக்கட்டும் ;என்று ..
சீதனச் சந்தையில் மருத்துவர்களும்
'என்ஜினீயர்களும்' சாதனை புரிந்த காலம் அது..!

அப்பாவின் சேமிப்பும்
அண்ணன்மாரின் உழைப்பும்..
அப்பாவிப் பெண்களின் அவலத்தை தீர்க்க
எப்பாடு பட்டது என்பதை
அப்போது உலகம் அறியும்..!

சுப்பரும் சோமரும் துலாவேறிச் சேர்த்த பணம்
இப்பெரும் சீதனத் தீயில் எரிந்து சாம்பலாகியது!
கன்னியரின் கண்கள் சிந்தியது கண்ணீர் அல்ல..
கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள்..!

எண்ணியதை முடித்தோர் பணமுள்ளோர் மட்டுமே
ஏனையோர்..
கண்ணியத்தைக் காக்க
காலமெல்லாம் கன்னிகளாய் வாழ்ந்தனர்..!

இந்தோனேசியாவின் எரிமலைகள் இடம்பெயர்ந்து சென்ற இடம் யாழ்ப்பாணம்..
வெந்து வெந்து வேல்விழிகள் நொந்து
வாழ்ந்த வரலாற்றுக் காலம் அது..!

பெண்ணிலவுகள் பேசாமல் தமக்குள் அழுதன
செந்தணலை நீரூற்றி தணிக்க யார்வருவர் ;என்று
நந்தவன மலர்கள் வாடி வதங்கின..
வெந்து வெந்து யாழ்மண் சுண்ணாம்பு ஆகியது..!

கண்ணீரைத் துடைக்க
கண்ணன்போல் வந்தான் ஒருவன்..
எண்ணங்கள் ஈடேற முடியாமல்
கிண்ணங்களுக்குள் சிக்கிய எறும்புகளை
புரட்சி என்னும் ..
வண்ணங்கள்பூசி விடுதலையின்
களம் நோக்கி அனுப்பினான்;அந்த
தமிழ் இனம் காக்க புறப்பட்ட கண்ணன்..!

வீட்டுச் சிறைக்குள் பூட்டி வைத்திருந்த
வனிதையரின் கைகளில் இருந்த பூட்டுக்களை
வேட்டுக்களால் உடைத்தெறிந்தான்
அந்த பெருவீரன்..!

விடிந்தது யாழ் மண்ணின்
'சீதனம்' என்னும் கொடும் போர்..!
விடியலின் நாயகனைத் தேடி
இன்று..
வீரமங்கையர்.வழிமேல்
விழிவைத்துக் காத்திருக்கின்றனர்..!


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.