தருமபுரி: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து!

தருமபுரி அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் தடம் புரண்டுள்ளது.
பெங்களூரு, தருமபுரி, சேலம் மார்க்கமாக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று ( நவம்பர் 10) காலை பெங்களூருவிலிருந்து காரைக்கால் புறப்பட்ட பயணிகள் ரயில் சரியாக 9.45 மணியளவில் காடுசெட்டிப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் இன்ஜின் பகுதியில் இருக்கும் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து இறங்கி தடம் புரண்டுள்ளது. இதை அறிந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியுள்ளார்.
இதனால் பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. ரயில் தடம் புரண்டதில் பயணிகளுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேலம், தருமபுரி ரயில்வே மீட்புக் குழுவினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்போது மீட்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விபத்தின் காரணமாக இவ்வழியாகச் செல்லக் கூடிய கோயம்புத்தூர், பெங்களூரு- சேலம் விரைவு ரயில்கள் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வருவதற்கு முன்னதாக அவ்வழியே பெங்களூர் - எர்ணாகுளம் விரைவு ரயில் சென்றுள்ளது. இதையடுத்து அரை மணி நேரத்திற்கு பிறகு வந்த ரயில் தடம் புரண்டதால் சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Powered by Blogger.