ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரங்கள்!

பொதுச் செயலாளர் அதிகாரங்களை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அளித்து திமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின்
தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 3,000க்கும் மேற்பட்ட பொதுக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். உடல்நலக் குறைவின் காரணமாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருவதால் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
ஓராண்டு 3 மாதங்களுக்கான திமுக தணிக்கைக் குழு அறிக்கை திமுக பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், திமுகவிற்கு தேர்தல் நிதியாக 50.90 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும், பொதுத் தேர்தல் விருப்ப மனு மூலம் 3.44 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்துவருவதால் அவரிடம் இருந்த சில அதிகாரங்கள் கட்சியின் தலைவரான ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திமுகவில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து நாம் ஏற்கனவே பொதுச் செயலாளர் அதிகாரம் தலைவருக்கு: திமுக பொதுக்குழுவில் முடிவு! என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
பொதுக் குழுவில் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டம் 70ஆம் ஆண்டு நிறைவு விழா குறித்து தனித் தீர்மானம் கொண்டுவந்து வாசித்த ஸ்டாலின், “அரசியல் சட்டம் தோன்றி 70ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடப்பட இருக்கின்ற இந்நேரத்தில் நினைவுகூர்ந்து இப்பொதுக்குழு மத்திய அரசுக்கு சில கருத்துகளை முன்வைக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனது முகப்புரையில் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசாகவே கட்டமைத்துள்ளது. இவற்றோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) உள்ளிட்ட கூறுகளை எப்போதும் திருத்த இயலாது என்று உச்ச நீதிமன்றத்தின் பெரு அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதை மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்வடிப்படை பண்புகளை (Basic Structures) சிதைத்திட திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது.
அதே வேளையில் கடந்த 70 ஆண்டுகளாக நமது அனுபவத்தின் வாயிலாகப் பார்க்கிற போது மத்திய அரசு பல அதிகாரங்களை இன்று வரை மாநிலங்களிடமிருந்து எடுத்து தன்வசம் குவித்து வைத்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் தலையாய கொள்கைகளில் மாநில சுயாட்சியும் ஒன்றாகும்.
மாநில சுயாட்சிக்காக தலைவர் கலைஞர் அவர்கள் அமைத்த இராசமன்னார் குழுவில் தமிழ்நாடு அரசின் கருத்துரையாக” உண்மையான கூட்டாட்சி அமைப்பில், நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை குறித்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்; ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் எஞ்சிய அதிகாரங்களுடன் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதை பொதுக் குழு மீண்டும் நினைவுகூர்கிறது.
மாநிலங்களுக்குத் தரப்பட்டிருக்கிற 18 அதிகாரங்களின் இன்றைய நிலையை கழகம் மிகக் கவலையோடு பார்க்கிறது. மேலும் பாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கமான மாநிலங்கள், மாவட்டப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டு இந்தியா முழுவதும் 200 ஜன்பத்கள் என்று பிரித்து ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்தை நோக்கி பா.ஜ.க அரசு இந்த நேரத்தில் பயணிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த முறையைக் கொண்டு வர எத்தனிப்பதற்கு கழகம் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இம்முயற்சியை கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறை
தொடர்ந்து, “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை (Proportional Representation) கொண்டுவருவது, அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers) அனைத்தும் தற்போது மத்திய அரசுக்கே உள்ள நிலையை மாற்றி, மாநில அரசுகள் சட்டங்களை இயற்றிக் கொள்ள வழிவகை செய்வது, நிதி, கல்வி, மான்யம், கடன் வழங்குதல் போன்றவற்றில் மத்திய அரசு கையாண்டு வரும் “பெரிய அண்ணன்” மனோபாவம் தவிர்க்கப்பட்டு, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவது,உள்ளிட்டவற்றை நிறைவேற்றிடும் வகையில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்” என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு
மேலும், “இடஒதுக்கீட்டுக் கொள்கையில் “பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர்’’ என்று புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்கின்ற செயலை மத்திய அரசு அண்மையில் அரசியல் சட்டத்திருத்த வாயிலாக மேற்கொண்டுள்ளதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது. பிற்படுத்தப்பட்டோர்க்கு வழங்கப்பட வேண்டிய 27 சதவிகித ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர்க்கான 22.5 சதவிகித ஒதுக்கீடும் மத்திய அரசு முழுமையாகச் செயல்படத்திடவில்லை. நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தி நியாயம் வழங்கிட வேண்டும் என்றும் இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மேலும், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அளித்திடும் வேலைவாய்ப்புகள் இன்றைய நிலையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. பொதுத்துறை நிறுவனங்களும் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு செய்திட வேண்டியது கட்டாயமாகிறது. அதுவே, சமூகநீதியின் சரியான பாதையாக இருக்கும்.
இதுபோன்ற உறுதியான செயல்திட்டம் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த ஏதுவாக அரசியல் சட்டப்பிரிவுகளில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து சமூகநீதியைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்” என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Powered by Blogger.