சாதாரண மனிதனின் அசாதாரணக் கனவு: சூரரைப் போற்று!

காப்பான் படத்திற்குப் பின் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
மாதவன், ரித்விகா சிங் நடிப்பில் வெளியான இறுதிச் சுற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சூர்யா நாயகனாக நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கத் துவங்கினார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் சுதா கொங்கரா. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இக்கதையை சூர்யாவிற்கு சொன்ன இயக்குநர் சுதா, அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்து பின்னர் துவங்கிய படமிது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ‘டைட்டில் போஸ்டர்’ வெளிவந்தபோது, ஒரு பெரிய விமானத்தின் முன்பு வேஷ்டி சட்டையுடன் நிற்கும் சூர்யாவின் லுக் வெளியானது. இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. நகரத்தின் பின்னணியில் கற்பாறைகளுக்கு மேலே, தன் இரு கைகளையும் பறவை போல விரித்தபடி குதிக்கும் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சூரரைப் போற்று படத்தின் முதல் தோற்றத்தை ட்வீட் செய்து, சூர்யா தனது கதாபாத்திரமான மாராவை அறிமுகப்படுத்தினார். அத்துடன், "ஒரு அசாதாரண கனவு கொண்ட ஒரு சாதாரண மனிதன்" என கதையின் உள்ளடக்கத்தை பதிவிட்டுள்ளார்.
அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக் கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. டிசம்பர் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சூரரைப் போற்று, படத்தின் தொழில்நுட்ப நேர்த்திக்காக ரிலீஸ் தேதியை, அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைத்துள்ளது படக்குழு.
நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்கை ஃபால், பார்ன் அல்டிமேட்டம் போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் கிரேக் பவல் இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து பாலிவுட் தயாரிப்பாளர் குனித் மோங்காவும் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
சூர்யா இப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் ஒரு படமும், ஹரி இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.
Powered by Blogger.