அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் - டிரம்பை எதிர்த்து கோடீஸ்வரர் போட்டி?

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் டிரம்பை எதிர்த்து அந்த நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான மைக்கேல் புளூம் பெர்க் போட்டியிட முடிவு செய்துள்ளார்.


அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் உள்பட 17 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல தொழில் அதிபரும், அமெரிக்காவின் 9-வது மிகப்பெரிய பணக்காரருமான மைக்கேல் புளூம்பெர்க் (வயது 77) ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் டிரம்பை வீழ்த்துவதற்கு தற்போதைய வேட்பாளர்கள் களம் போதுமானதாக இல்லை என்று நியூயார்க் நகர முன்னாள் மேயரான மைக்கேல் புளூம் பெர்க் கவலை கொள்வதாக அவரது ஆலோசகர் ஹோவர்ட் வொல்ப்சன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முறைப்படி இணைவதற்கான ஆவணங்களை இன்னும் ஓரிரு நாட்களில் அலபாமா மாகாணத்தில் மைக்கேல் புளூம் பெர்க் தாக்கல் செய்வார் என ஹோவர்ட் வொல்ப்சன் கூறினார்.

இது குறித்து ஹோவர்ட் வொல்ப்சன் கூறுகையில், “நாம் இப்போது வேலையை முடித்து டிரம்ப் தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதை செய்யும் அளவுக்கு வேட்பாளர் களம் இல்லை என மைக்கல் புளும் பெர்குக்கு பெரிய கவலை உள்ளது” என்றார்.

மேலும் “மைக்கேல் புளூம் பெர்க்கின் சாதனை, தலைமை மற்றும் மாற்றத்தை உண்டாக்குவதற்கு மக்களை ஒன்றிணைக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் டிரம்பை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியும்” என கூறினார்.

தொழிலதிபர், அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சிறந்த நன்கொடையாளர் என பல்வேறு முகங்களை கொண்ட மைக்கேல் புளூம் பெர்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 53 பில்லியன் டொலர் ஆகும்.

இது ஜனாதிபதி டிரம்பின் சொத்து மதிப்பை விட 17 மடங்கு அதிகமாகும். ஆரம்ப காலத்தில் வங்கி ஊழியராக பணியாற்றி வந்த இவர் தனது பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கி தொழில்துறையில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார்.

ஜனநாயக கட்சியில் இணைந்து தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்கிய இவர், 2001ம் குடியரசு கட்சிக்கு தாவி நியூயார்க் நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டார்.

அதில் வெற்றி பெற்ற இவர் 2012ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை நியூயார்க் நகர மேயராக பதவி வகித்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இவர் தனது தாய்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு மீண்டும் திரும்பினார்.

ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இவர் இணையும் பட்சத்தில் கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்த போட்டி கடுமையானதாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இவர் ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் களம் இறங்க விரும்புவது இது முதல் முறை அல்ல.

இதற்கு முன் இவர் பலமுறை போட்டியிட விரும்பினாலும், பணபலம் படைத்த ஒரு தொழிலதிபரை மக்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால் கடைசி நேரத்தில் தனது விருப்பத்தை மாற்றிக்கொண்டார்.

ஆனால் இப்போது அவருக்கு அந்த தயக்கம் இல்லை. ஏனென்றால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் ஆவார்.

எனவே டிரம்பை போல் தனக்கும் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் மைக்கேல் புளூம்பெர்க் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.