இசை மாரத்தான்: இளையராஜாவை கெளரவித்த இசைக் கலைஞன்!

ஒரு பாடகன் இடைவிடாமல் 10 மணி நேரம் பாட முடியுமா? என்ற ஆச்சர்யத்தோடு அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தங்களுக்குள் கேள்வி எழுப்பியவாறு இருக்கையில் அமர்ந்தனர்.

அதுவும் 100 பாடல்கள் என்றவுடன் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போகின்றனர். 10 மணி நேரம், 100 பாடல்களா? என ஆச்சர்யம் ஓய்வதற்குள், அந்த 100 பாடல்களுமே ஒரே ஒரு இசைக் கலைஞனின் ஹார்மோனியப் பெட்டியில் இருந்து பிறந்தது தான் என்றவுடன் இது கனவா?நிஜமா? என்ற மாய நிலைக்குள் செல்லத் துவங்கினர். நிஜம் தான், அந்தக் பாடகன் திருச்சூரைச் சேர்ந்த அனூப் சங்கர். அந்த நிகழ்ச்சியில், அவர் பாடிய 100 பாடல்களையும் இயற்றிய இசைக் கலைஞன் இளையராஜா.
இளையராஜாவின் இசையில் அமைந்த மெலடி பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 10 மணி நேரம் 100 பாடல்களை இடைவிடாமல் பாடி, இசை ரசிகர்களை அசரடித்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த அனூப் சங்கர்.
திருச்சூரைச் சேர்ந்த பின்னணி பாடகரான அனூப் சங்கர் நேற்று(நவம்பர் 10) கோழிக்கோடில் உள்ள தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில், இளையராஜாவின் மெலடி பாடல்களைத் தேர்ந்தெடுத்து பத்து மணி நேரத்துக்கும் மேல் பாடி அரங்கில் உள்ள ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். சின்ன தம்பி படத்தில் வரும் உச்சந்தலை நெத்தியில பாடலை சிறு வயதில் கேட்ட அனூப், அதன் பின்னர் இளையராஜாவின் தீவிர ரசிகனாக மாறியிருக்கிறார். இளையராஜா எனும் நிலத்தில் விளைந்த இசையை உணவாக சுவைத்த அந்த ரசிகன், பின்னணி பாடகராகவும் மாறிய பிறகு, தான் அனுபவித்த இசையை மக்களுக்கும் பகிர முடிவெடுத்ததன் விளைவுதான் இந்த இசை விழா.
தாய் மூகாம்பிகை படத்தில் இடம்பெற்ற ஜனனி ஜனனி என்ற பாடலுடன் தன் இசை மாரத்தானை காலை 11.20 மணியளவில் துவங்கினார் அனூப் சங்கர். அதனைத் தொடர்ந்து ஜேசுதாசின் குரலில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத(மன்னன்) பாடலை பாட ரசிகர்கள் ஆன்மீகத்திலும், தாய்மையிலும் கரைந்தனர். ஆயிரம் பாடல்களூக்கு மேல் இசையமைத்த இளையராஜாவின் இசையிலிருந்து கவனமாக தேர்ந்தெடுத்த 100 பாடல்களை பாடியிருக்கிறார் அனூப்.
இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களாக கருதப்படும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி...(தளபதி)கண்ணே கலைமானே...(மூன்றாம் பிறை)அந்த நிலாவத் தான் நான்...(முதல் மரியாதை)தூளியிலே ஆட வந்த..(சின்ன தம்பி) போன்ற பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார் இந்தக் கலைஞன்.
பாடல்களோடு மட்டும் நிற்காமல், ஒவ்வொரு பாடலும் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம், அந்த பாடலில் கையாளப்பட்டுள்ள இசை நுணுக்கங்கள் என சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து பரிமாறியிருக்கிறார் அனூப். முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...* பாடலை பாடிய பின்பு, பாடலின் வரிகள், இசை, பாடல் படமாக்கப்பட்ட விதம் என அழகாக விளக்கி ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளார் இந்த ராஜா ரசிகன்.
இந்த இசை மாரத்தானில் அனூப் உணவே உட்கொள்ளாமல் அவ்வபோது தண்ணீர் மட்டுமே அருந்தி பாடியிருக்கிறார். நிகழ்ச்சி இரவு 10.45 மணி வரை நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 25 இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்களித்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.