ரஜினி ஒரு தலைவரா? எடப்பாடி நக்கல்!

நடிகர் ரஜினிகாந்த் ஒரு அரசியல் தலைவரே கிடையாது, அவர் சொல்வதற்கெல்லாம் கவலைப்படுவானேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (நவம்பர் 11) கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார்.


சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுமை மிகுந்த தலைவர்களுக்கான வெற்றிடம் தமிழ்நாட்டில் அப்படியேதான் உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் அரங்கில் விவாதமானது. அதாவது ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைவர்களின் மறைவுக்குப் பின் அந்தந்த கட்சிகளை ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் நடத்திவந்தாலும் இவர்களில் யாரும் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்ற அர்த்தத்தில் ரஜினி கூறியிருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு திமுக, அதிமுக என இரு கட்சிகளில் இருந்தும் உடனடியாக எதிர்வினைகள் வந்தன.

திமுக பொருளாளர் துரைமுருகன், “ரஜினி சொல்லும் தலைமைக்கான வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி நீண்டகாலம் ஆகிவிட்டது. ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியலில் இருந்திருந்தால் இது அவருக்கு தெரிந்திருக்கும். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருப்பதால் தமிழக அரசியலின் தட்ப வெப்பநிலை அவருக்கு தெரியவில்லை. நேரடியாக அரசியலுக்கு வரும்போது வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பியதை புரிந்துகொள்வார்” என்று தெரிவித்தார்.

அதிமுக சார்பில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு என்ற அடிப்படையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி கூறுவதாக கருதுகிறேன். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் யாருடனும் ஒப்பிட முடியாது. இருவரும் தனித்தன்மை மிக்கவர்கள். தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை” என்று கூறியிருந்தார்.

மேலும் ரஜினியின் கருத்துக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நன்றி தெரிவிக்கும் கூட்டத்திலேயே பெயர் குறிப்பிடாமல் பதில் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

“அதிமுகவில் வெற்றிடம் உள்ளது என்று சொன்னவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இது. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை 2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில் இன்று (நவம்பர் 11) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசிய அவர்,

“உள்ளாட்சித் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். குறித்த காலத்துக்குள் அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட இருந்த அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்” என்று தெரிவித்தார்.

’தமிழ்நாட்டு அரசியல்ல ஆளுமை மிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருப்பதாக சொல்கிறதே?’ என்ற கேள்விக்கு, ‘ யார் சொல்றானு சொல்லுங்க?’என்று திருப்பிக் கேட்டார் எடப்பாடி. ‘ரஜினி சொல்றாரு’ என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பதில் வர,

“அவர் ஒரு தலைவரா? கட்சி ஆரம்பிச்சிருக்காரா? அவர் ஒரு நடிகர் புரியுதுங்களா. அரசியல் தலைவர்கள் யாராவது சொல்றாங்களா. சம்பந்தம் இல்லாத ஒருத்தர் சொன்னா அதுபத்து நாம ஏன் கவலைப்படுவானேன்? ஏற்கனவே இதப் பத்தி அழகாக விக்கிரவாண்டி நன்றி அறிவிப்பு கூட்டத்துல தெரிவிச்சிட்டேன். தொடர்ந்து இதை பேசிக்கிட்டிருக்காங்க. நீங்க விறுவிறுப்பு வேணும்குறதுக்காக ஊடகத்துலயும் பத்திரிகையிலயும் இதை போடுறீங்க” என்று ரஜினியை நக்கலடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.