சஜித் தோல்விக்கு ஐக்கியக் தேசியக் கட்சியும் காரணமா?

ஆம். யாரை ஐக்கிய தேசியக் கட்சி தூக்கி வீசியதோ, அவரிடம் பொறுப்பளித்தார் சஜித். திஸ்ஸ அத்தநாயக்கா என்பவர் ரணில் உட்பட கட்சியின் பெரும்பான்மையினரால் விரும்பப்படாதவர். காரணம் 2015 ஜனாதிபதித் தேர்தலில் பல்டி அடித்து ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு மகிந்த அணிக்குத் தாவியவர். திடீரென சென்றமாதம்தான் சஜித் ஆதரவானார். அவருக்கு பொறுப்பும் பெரிதாக கொடுக்கப்பட்டது. இது அப்பா, அம்மாவுக்குப் பிடிக்காத ஒரு பிழையானவனை பிள்ளை கொணர்ந்து வீட்டிலே சிம்மாசனத்தில் அமர்த்துவது போன்றது.

'அட... நம்மை விட விஞ்சிவிடுவார் போல, இப்போதே இப்படி என்றால் ஜனாதிபதி ஆகிவிட்டால் நம்நிலைமை...' என ரணில் உட்பட பெரும்பாலானோர் அச்சமுற்றிருக்கலாம். இது அவர்களின் முழுவீச்சிலான பரப்புரைக்கும் தடைக்கல் ஆனது.

இன்னொன்று சஜித் வாதாடியும், போராடியும், கட்சியின் மூத்தோரை எதிர்த்துமே ஜனாதிபதி வேட்பாளர் ஆனார். இயல்பான விருப்போடு கட்சி அவரை நியமிக்கவில்லை. கட்சியே துண்டுபடும் அளவிற்கு வேட்பாளர் போர் நடந்தது. அப்போதே சஜித் எதிர்ப்பு அணியொன்று உருவாகிவிட்டது. இப்போதைக்கு ஜனாதிபதி பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, உள்ளக பிரச்சனைக்குரியவர் தோற்றால் போதும் எனும் எண்ணமும் பலர்க்கு இருந்திருக்கலாம்.

அடுத்து பிரதமர் விடயம். இத்தனை ஆண்டுகாலமாக ஐ.தே.கவின் தலைவரான ரணில் பிரதமராக உள்ளார். அவருக்கே அங்கே பெரும்பான்மையானோர் ஆதரவு. சஜித்  'தான் ஜனாதிபதியானால் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரே பிரதமர் என்றும், குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கு இடமில்லை' என்றும் சொன்னார். இதுகூட ரணில் உட்பட அநேகர் சஜித்திற்காக முழுமனதோடு வேலை செய்வதை தள்ளிப்போட வைத்திருக்கலாம்.

அடுத்து ராஜித சேனாரட்ண போன்றவர்கள் கோத்தபாயவின் மீது புலிகள் அழிப்பு தொடர்பாக வைத்த பரப்புரை. கட்டுநாயக்காவை புலிகள்தான் அடித்தார்கள் என சொன்னால் எப்படி தமிழர்கள் பெரும்பான்மையானோர் மகிழ்வார்களோ, அது போலவே புலிகளை மிக மோசமாக கோத்தபாய நடாத்தினார் எனச்சொன்னால் சிங்களவர்கள் அவருக்குச் சார்பாவார்களே தவிர, கோத்தபாயவை எதிர்க்க மாட்டார்கள்.

அடுத்து தமிழ்த்தரப்பின் பக்கமாக வெளிப்படுத்தப்பட்ட கருத்து. சஜித் வந்தால் வலுவான அதிகாரம் வட கிழக்கிற்கு கிடைக்கும் என்பதற்கொப்பான கருத்து வெளிப்பாடு. இது சிங்களவர்களை அச்சமூட்டியிருக்கும். இதை ஒரு ஒப்பந்தமாகவே பரப்புரை செய்தனர். இவை கடைசி நாட்களின் பரப்புரை.

தமிழ், முஸ்லிம் மக்கள் செய்த அளவிற்கு சஜித்திற்காக சிங்களப் பகுதிகளின் பரப்புரை அளவு மந்தமே.

ஆக சஜித் பிரேமதாச தோல்வியில் சஜித், ஐக்கிய தேசியக் கட்சி, இவர்களோடிணைந்தவர்களும் ஒருபக்க முக்கிய காரணமே.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.