“அண்ணனுங்க தம்பிக்கு வழிவிடுங்க” : எஸ்.ஏ.சி!
கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டமாகவும், அவர் திரைத்துறையில் 60 ஆண்டுகாலம் பங்காற்றியதன் விழாவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ‘உங்கள் நான்’ என்கிற விழா. திரையுலகின் கலைமகனை, கலைத் துறையினர் பெருமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விழாவாக இருந்தாலும், அது மிகப்பெரிய அரசியல் விழாவாக மாறிப்போனது. ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் ‘தமிழகத்தின் முதல்வர் பதவி’யின் எதிர்கால போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட நிலையில் அவர்களது பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அதேசமயம், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியபோது “ஆண்டுட்டு அண்ணனுங்க தம்பிமார்களுக்கு வழிவிடணும்’ என முதல்வர் நாற்காலியின் ஓரமாக துண்டு போட்டதும் விழாவின் முக்கிய பேச்சாக மாறிப்போனது.
இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய பெரும்பான்மையான படங்களில் அரசியல் வசனங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த சினிமா பிரபலங்களில் இவரும் ஒருவர். இறுதிக்காலத்தில் அவரை கடுமையாக விமர்சித்து, ஜெயலலிதா ஆதரவு நிலையை மேற்கொண்டார் அல்லது மேற்கொள்ள வைக்கும் விதத்தில் விஜய் படங்களுக்கு பிரச்சினை கொடுக்கப்பட்டது. விஜய் நற்பணி மன்றத்தை அரசியல் ரீதியான அமைப்பாக மாற்றி, தனது மகன் நடிகர் விஜய் தமிழக அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசை. அதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைகளை தமிழகம் முழுவதும் முடுக்கிவிட்டு கண்காணித்து வருகிறார்.
ஜெயலலிதா-கருணாநிதி மறைவுக்குப்பின் தமிழக அரசியலில் நேரடியாக குதித்துவிடலாம் என்று விஜய் தரப்பில் திட்டமிட்டுக் கொண்டிருந்த சூழலில் கமலஹாசன் கட்சி ஆரம்பித்தார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். சூழ்நிலை சரியில்லை என்பதால் பொறுமை காக்கலாம் என்று காத்திருந்தார். இந்த சூழலில், நடிகர் கமலின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவரது கலையுலகத்தின் அறுபதாண்டு நிகழ்வை கொண்டாடும் விதமாக நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று(17.11.2019) மாலை ‘உங்கள் நான்’ என்ற விழா நடைபெற்றது. இதில் இளையராஜா கலைநிகழ்ச்சி நடத்தினார். கமலுக்கு நெருக்கமானவர்கள் அவரது கட்சியினர் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி, சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்துகொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்திப் பேசிய போது “ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்தேன். ஆனால், கமல்ஹாசன் துணிச்சலாக அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினிகாந்தும் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். இரு ஜாம்பவான்களும் அரசியலில் சாதிப்பது நிச்சயம். என் ஆசை என்னவென்றால் கமல், ரஜினி ஆகிய இருவரும் சேர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழருக்கும் நல்லது. இருவருமே கலை உலகின் மூத்த பிள்ளைகள். இருவரும் இணைந்தால் கலை உலகமே பின்னால் நிற்கும். எனவே அரசியலில் இருவரும் ஒன்று சேரவேண்டும். தமிழன் அது இதுவென இங்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு தண்ணீர் குடித்தாலே அவன் தமிழன் தான். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது நியதி. எனவே ஆண்டவர்கள் இனிஆளப்போகிறவர்களுக்கு வழி விடட்டும். ஆண்ட பின்னர் இது போதுமென நினைத்து தம்பிமார்களுக்கு நீங்களும் வழிவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.
சர்க்கார், மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் நேரத்தில் அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சந்தித்தது. அப்போதெல்லாம் ஆட்சியாளர்களின் மனம் குளிர அரசியல் பேசி காரியம் சாதித்துக் கொண்ட சந்திரசேகர், நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் நேரடியாக ஆளுங்கட்சியை எதிர்க்காமல், விமர்சனம் செய்யாமல் இதுவரை ஆண்டவர்கள் கமல், ரஜினிக்கு வழிவிட வேண்டும் என்று திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில், எஸ் .ஏ .சந்திரசேகர் பொடி வைத்து கமல், ரஜினியை முன்னிறுத்தி அரசியல் பேசி இருப்பதோடு எதிர் காலத்தில் தனது மகன் அரசியலுக்கு வரும்பொழுது நீங்கள் இருவரும் வழிவிட்டு ஒதுங்கி கொள்ள வேண்டுமென்று மறைமுகமான கோரிக்கை வைத்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை