சங்கத்தமிழன்: திரைக்குப் பின்னால் வேட்டையாடிய விளையாட்டு!!

இந்திய சினிமாவில் 71 ஆண்டுகாலம் உயிர்ப்புடன் இயங்கிவரும் தயாரிப்பு நிறுவனம் விஜயா புரொடக்‌ஷன்ஸ். வெங்காய வியாபாரம் செய்துவந்த பொம்மா நாகி ரெட்டி அவர்களால் 1948ஆம் வருடம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட விஜயா வாகினி தயாரிப்பு நிறுவனம் கடந்த 71 வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் படங்களைத் தயாரித்துள்ளது. உயர்ந்து வரும் நடிகருடைய சம்பளம், தயாரிப்புச் செலவு, அதற்குரிய வியாபாரம், வசூல், நாணயம் இன்மை இவற்றின் காரணத்தால் ஏவிஎம் போன்ற பாரம்பரியமிக்க நிறுவனங்கள் படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி கொண்டாலும், மூன்றாவது தலைமுறையிலும் படத்தயாரிப்பில் இருக்கும் ஒரே தென்னிந்திய நிறுவனம் விஜயா வாஹினி. என்.டி.ராமராவ், எம்ஜிஆர் ,ஜெயலலிதா, என மூன்று முதல்வர்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமலஹாசன், இவர்களைத் தொடர்ந்து அஜித், விஜய், தனுஷ் என்று இளைய தலைமுறை நடிகர்கள் நடித்த படங்களையும் தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த சங்கத்தமிழன் படத்தை தயாரித்து முடித்த பின் அப்படத்தை வெளியிடுவதற்கு பட்ட கஷ்டம் சாதாரணமானதல்ல என்கின்றனர்



கோடம்பாக்கத்தில் உள்ள மூத்த தயாரிப்பாளர்கள். இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த விஜயா வாகினி நிறுவனத்தை திட்டம்போட்டு வேட்டையாடி இருக்கிறது ஒரு கூட்டம் என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத சினிமா பிரமுகர். சினிமாவை நேசித்து நஷ்டம் ஏற்பட்டாலும் அந்தத் தொழிலை தொடர்ந்து செய்துவந்த விஜயா வாகினி நிறுவனத்தின் தயாரிப்பு பொறுப்பை கவனித்து வந்தவர் சுயநலத்தோடு செயல்பட்டதன் காரணமாக 2014ல்தயாரிக்கப்பட்ட வீரம் படம் தொடங்கி இந்த வாரம் வெளியான சங்கத்தமிழன் வரை சங்கடங்களை சந்தித்து வந்திருக்கிறது விஜயா வாஹினி நிறுவனம். சங்கத்தமிழன் ரிலீஸாவதில் பிரச்சனை என்ன என்று ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.



 கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பழமொழி அதுதான் சங்கத்தமிழன் வெளியீட்டிலும் எதிரொலித்திருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு காட்சியில் நம்பியவர்கள் துரோகம் செய்தால் என்ன செய்ய முடியும் என்று வசனம் பேசியிருப்பார் அதுபோன்ற அனுபவத்தைத் தான் சங்கத்தமிழன் தமிழ்நாடு உரிமை வாங்கிய லிப்ரா ரவீந்தர் மூலம் சந்தித்திருக்கின்றனர் தயாரிப்பு நிறுவனத்தினர். தீபாவளிக்கு வருவதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றினார்கள். அந்த அறிவிப்பை சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் வெளியிட்ட லிப்ரா ரவீந்தர் , ‘எந்தவிதமான பிரச்சனையும் இன்றி நான் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முழு பணத்தையும் தயாரிப்பாளருக்கு செலுத்திவிட்டு சங்கத்தமிழன் படத்தை ரிலீஸ் செய்வேன்’ என்று அறிவித்தார். போதிய அவகாசம் இருந்தும் பிரச்சனைகளை பேசி முடிக்காமல் தயாரிப்பாளருக்கு ஒரு கடுமையான நெருக்கடியையும், மன உளைச்சலையும் உருவாக்கியது




ரவீந்தர் தான் என்கின்றனர் இப்படம் வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற பஞ்சாயத்தை உன்னிப்பாக கவனித்து வந்தவர்கள். லிப்ரா ரவீந்தரைப் பொருத்தவரைஅவர் வாங்குகின்ற படங்களை பிரச்சனையின்றி இதுவரை தமிழகத்தில் ரிலீஸ் செய்ததில்லை. அதேபோன்று பேசிய விலையின் அடிப்படையில் பணத்தை முழுமையாக தயாரிப்பாளருக்கு செட்டில் செய்வது இல்லை. அதனால்தான் ரவீந்தருக்கு வழங்கப்பட்டிருந்த சமுத்திரக்கனி நடித்த அடுத்த சாட்டை திரைப்படத்தின் தமிழக உரிமையை அந்த நிறுவனம் ரத்து செய்துவிட்டதாக அறிவித்தது. அவர்களுக்கு முன் தொகையாக கொடுத்த முதல் காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லாததால், போன வேகத்தில் திரும்பி வந்தது.



 இப்படிப்பட்ட நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தம் தேவையில்லை என்ற முடிவுக்கு முன்னெச்சரிக்கை உணர்வுடன் அடுத்த சாட்டை பட நிறுவனம் முடிவெடுத்தது. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களை கேள்விபட்ட பின்னரும் விஜயா வாகினி தலைமைப் பொறுப்பில் இருந்த நபர் தனக்கு அதிகமான கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக சங்கத்தமிழன் படத்தின் தமிழக உரிமையை 10.50 கோடி ரூபாய்க்கு, மூன்று கோடி ரூபாய் முன் பணம் பெற்றுக்கொண்டு லிப்ரா நிறுவனத்திற்கு வழங்கியிருக்கின்றார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான எந்த ஒரு படமும் தமிழகத்தில் வசூல் மூலம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை பெற்றுத் தந்தது கிடையாது. அப்படியிருக்கும்போது 10.5 கோடி ரூபாய்க்கு சங்கத்தமிழன் படத்தை வாங்கியது ஏன் என்கிறபோது, படம் வெளியீட்டிற்கு முன்பாக வாங்கிய விலைக்கு படம் வியாபாரம் ஆகவில்லை. ஒப்பந்தம் செய்த அடிப்படையில் விநியோகஸ்தர்கள் அல்லது திரையரங்கு உரிமையாளர் பணம் செலுத்தவில்லை என்று காரணங்களைக் கூறி விலையை குறைப்பது அல்லது பணத்தை குறைத்து கொடுப்பது லிப்ரா ரவீந்தரின்வாடிக்கை என்கின்றனர் கோடம்பாக்கத்தில். அதுமட்டுமன்றி, படத்திற்கான ஒப்பந்தம் செய்தவுடன் அந்த படம் சம்பந்தமான புரமோஷன் நடவடிக்கைகளை இணையதளம் ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கிவிடுவார்.



 இதனை தன் வசதிக்கேற்ப சில ஏஜென்டுகள் மூலம் அமல்படுத்தும் ரவி, படம் வெளியான பின்னர் விளம்பரக் கட்டணங்களை முழுமையாக கொடுப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. அதுபோன்றுதான் சங்கத்தமிழன் படத்திற்கு புரமோஷன் நடவடிக்கைகளை தொடங்கி பிரம்மிப்பு ஏற்படுத்தினர். தமிழ் சினிமாவில் பெரும்பான்மையாக வியாபார முக்கியத்துவம் உள்ள நடிகர்கள் நடித்த படங்கள் மினிமம் கியாரண்டி முறையில் வியாபாரம் செய்வது தயாரிப்பாளர்கள் படத்தை வாங்கியவர்கள் கடைபிடிக்கும் நடைமுறை. ஆனால், சங்கத்தமிழன் படத்தை தமிழகம் முழுவதும் விநியோக அடிப்படையில் சுமார் 9.30 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறார். வாங்கிய விலையைவிட குறைவாக வியாபாரம் செய்வது ஆரோக்கியமான வியாபார நடைமுறை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் பட வெளியீட்டுக்கு முன்பு பட்ஜெட் பற்றாக்குறை சூழலை உருவாக்கி பேசிய விலையை குறைப்பதற்கான நடவடிக்கை இது என்கின்றனர் அவருடன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்.



 விஜயா வாகினி நிறுவனத்தை பொருத்தவரை லாபமோ நஷ்டமோ அறிவித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது வாடிக்கை. இந்த சூழ்நிலையில் 2014 ஆம் ஆண்டு இவர்கள் தயாரிப்பில் வெளியான வீரம் படம் வியாபாரத்தில் அரசு கேளிக்கை வரி விதிக்கும் பட்சத்தில் படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு விலையில் 10 சதவீதத்தை குறைத்துக்கொள்வது என்று தயாரிப்பு நிறுவனம் வாக்குறுதி கொடுத்ததாகவும், சங்கத்தமிழன் வெளியீட்டுக்கு முன்பு அத்தொகையை தங்களுக்கு பெற்றுத்தருமாறு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பில் செங்கல்பட்டு, திருச்சி, சேலம் ஏரியாவிற்கு வீரம் படத்தின் உரிமை வாங்கிய விநியோகஸ்தர்கள் புகார் கொடுத்தனர். இதே நிறுவனம் 2017 ஆம் வருடம் விஜய் நடித்த பைரவா படத்தை தயாரித்து வெளியிட்டனர். அப்போது இதுபோன்ற ஒரு புகாரை வீரம் படத்தின் சேலம் விநியோகஸ்தர் சிவா விநியோகஸ்தர் கூட்டமைப்பில்கொடுத்த போது, வீரம் பட ஏரியா ஒப்பந்தம் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வரி இருந்தாலும், இல்லை என்றாலும் ஒப்பந்தம் செய்து கொண்ட பணத்தை செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் அதனால் இந்த புகார் அர்த்தமற்றது என்று நிராகரிக்கப்பட்டது.



 சங்கத்தமிழன் வெளியீட்டுக்கு முன்பு மீண்டும் வீரம் படத்தின் மூலம் ஏற்பட்ட வரி இழப்புத் தொகையை பெற்றுத்தருமாறு, செங்கல்பட்டு, திருச்சி ஏரியா வீரம் படத்தின் விநியோகஸ்தர்கள் புகார் மனு அளிக்கின்றனர். இந்த புகாரை 2014ஆம் ஆண்டு நிராகரித்த கூட்டமைப்பு தற்போது ஏற்றுக்கொள்கிறது. படத்தின் தயாரிப்பாளர் பாரதி இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு அதனை சட்டரீதியாக அணுகப் போவதாக பஞ்சாயத்து செய்த கூட்டமைப்புத் தலைவர் அருள்பதியிடம் கூறுகிறார்.



 சங்கத்தமிழன் படத்தை வாங்கிய ரவி கூட்டமைப்பு கேட்கின்ற தொகையை தான் கொடுத்து விடுவதாகவும், பிரச்சனையின்றி படத்தை வெளியிடுவதற்கு ஒப்புக் கொள்ளுமாறும் தயாரிப்பு தரப்பை வலியுறுத்துகிறார். பட வெளியீட்டுக்கு முன்பாக அவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாக்கி தொகையை தயாரிப்பாளருக்கு செலுத்தவில்லை. அதேநேரம் மூன்று கோடி ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு எஞ்சிய பணத்தைக் கொடுப்பதற்கு பதிலாக பல்வேறு செலவு கணக்குகளை கூறியிருக்கிறார். இது எதனையும் ஏற்றுக்கொள்ளாத தயாரிப்பு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாக்கி தொகையை செலுத்திவிட்டு படத்தை வெளியிடுமாறு கூறுகின்றனர். இதனால் அறிவித்தபடி செப்டம்பர் 15 அன்று சங்கத்தமிழன் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.



தமிழகம் தவிர்த்து பிற உரிமைகளை விஜயா வாகினி நிறுவனம் நேரடியாக வியாபாரம் செய்திருந்தனர். 71 ஆண்டு கடந்ததங்கள் நிறுவனத்தின் காலந்தவறாமை கௌரவத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய நெருக்கடி இவர்களுக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக இப்படத்தை ஒட்டி எழுந்த பஞ்சாயத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களின் பிரதான நோக்கம் சங்கத்தமிழன் படத்தின் தமிழக உரிமையை வாங்கிய லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான முடிவுக்கு தங்களை உட்படுத்துவது என்பதை அறிந்து கொண்டனர். இந்த நிறுவனத்திற்கு ஆலோசகராக இருப்பது வீரம் படத்தின் செங்கல்பட்டு விநியோகஸ்தர் தேனாண்டாள் முரளி(1.25கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்).




இவரை கூட்டமைப்பில் புகார் கொடுக்கச் சொன்னது லிப்ரா ரவி என்பது தாமதமாகவே தயாரிப்பு தரப்புக்கு தெரியவந்திருக்கிறது. தயாரிப்பாளருக்கு உதவி செய்ய வேண்டிய தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு, கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களுக்கு சாதகமாக செயல்பட்டது. 2014 ஆம் ஆண்டு ரிலீஸான படத்திற்கு தற்போது நஷ்ட ஈடு கேட்பது நியாயமில்லை என்று பேசவில்லை. அதற்கு மாறாக தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் ஒருவர், சென்னை நகர விநியோக உரிமையை 35 லட்ச ரூபாய்க்கு தனது பினாமி பெயரில் வாங்கிகொண்டார். விநியோகஸ்தர்கள் அதிகமாக கமிஷன் கேட்கிறார்கள் என்று கூறிவந்த இந்த தயாரிப்பாளர் சென்னை நகர விநியோகஉரிமைக்கு 20% கமிஷன் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட, அப்போது குறுக்கிட்ட கூட்டமைப்புத் தலைவர் அருள்பதி “எல்லோருக்கும் 15% கமிஷன் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


சென்னை நகருக்கு 20% என்றால் தவறாகிவிடும் எனக்கூறி 15% என திருத்தி இருக்கிறார். நம்பி வியாபாரம் செய்த நிறுவனம் பிரச்சனை என்று வருகிறபோது பேச்சுவார்த்தை நடத்துகிற கூட்டமைப்பு, தயாரிப்பாளருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கஆலோசனைக்குழு உறுப்பினர் என எவரிடமும் நேர்மை என்பது இல்லை என்பதை பட்டவர்த்தனமாக புரிந்துகொண்ட தயாரிப்பு தரப்பு தமிழக உரிமைக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை முழுமையாக வாங்காமல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் கடிதத்தை அனுப்பியது. இதன் மூலம் விஜயா வாகினி தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழக உரிமை மூலம் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.


 ஏன் இப்படி ஒரு முடிவை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டது என்று விசாரித்தபோது எப்போது தமிழ் சினிமாவில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு தீர்வு சொல்வதும் அதனை சுகமாக முடிப்பதற்கு உதவி செய்யக்கூடிய திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி, கோவை ஏரியா விநியோக உரிமையை இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தார்.


 இறுதிகட்டத்தில் “இரண்டு கோடி ரூபாய் தர இயலாது. ஒரு கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும்’ என்று முட்டுக்கட்டை போட்டது. “தங்கள் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பு பொறுப்பிலிருந்தவர் கமிஷனுக்காக நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டது;



 இப்படி நம்பியவர்கள் எல்லோருமே தங்களுக்கு எதிராக நாடகமாடியது கண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்? 71 ஆண்டுகாலம் படத்தயாரிப்பில் இருந்த எங்களது நிறுவனம் இழப்புக்களை சந்தித்து, தமிழ் சினிமாவிற்கு கௌரவம் தேடிக் கொடுத்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெருமை தெரியாத நபர்களோடு வியாபாரம் செய்ததற்காக இந்த இழப்பு எங்களுக்குத் தேவை என்கிறது தயாரிப்பு வட்டாரம்” தமிழ் சினிமாவிற்கு உலக அளவில் அடையாளத்தை ஏற்படுத்தி கௌரவத்தை தேடித் தந்த, 71ஆண்டு கடந்தும் படத்தயாரிப்பில் இருக்கும் விஜயா வாகினி நிறுவனத்தை கட்டப்பஞ்சாயத்து கலாச்சாரம் வேட்டையாடி விளையாடியிருக்கிறது.


 -இராமானுஜம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.