தமிழீழ மக்களுக்காக இரத்த - உயிர்த் தியாகம் புரிந்த மாவீரர்களுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய பணி.மு. திருநாவுக்கரசு.!!

நவம்பர்    27

25 /11 /2019
ஈழத்தமிழ் மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் உடல்- பொருள் -ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து இரத்த- உயிர்த்  தியாகம் புரிந்தவர்கள் மாவீரர்கள்.


தம்மை  ,    தம் இளமையை , தம் வாழ்வை,  வாழ்வின் வசந்தங்களை, தாயை, தந்தையை ,,சகோதரன்களை, சகோதரிகளை ,   காதலனை அல்லது காதலியை,  கணவன் அல்லது மனைவியை  பிள்ளைகளை  நண்பர்களை, இனிய உறவுகளையெல்லாம்   துறந்து தமிழீழ விடுதலைக்காய்  தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து இரதத உயிர்தியாகம் புரிந்தார்கள்   மாவீரர்கள்.

இவ்வாறு இரத்த - உயிர்த் தியாகம் புரிந்த இவர்களின் மத்தியில் உணவொறுப்பு உயிர் தியாகம் புரிந்த ஒருவராய் திலீபன் காணப்படுகிறார்.

இத்தகைய 60,000    வரையிலான பெயர்கள் அடங்கிய மாவீரர் பட்டியலில் ""சங்கர் "" எனப்படும் சத்தியநாதன் முதலாவது மாவீரனாய்த்   தன் பெயரைப் பணித்துள்ளார்.

1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் , நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்று இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது  அதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சங்கர் காயமடைந்தார். சுமாராக ஒரு வாரமாக தாய் மண்ணில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சங்கர் மேலதிக சிகிச்சைக்காக தமிழகம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில்  அங்கு  மருத்துவமனையில்  சேர்க்கப்பட முன்பே  நவம்பர்  மாதம்  27ஆம் திகதி   சனிக்கிழமை  மாலை  வேளை    தமிழக மண்ணில் வீரச்சாவடைந்தார்.

அவ்வாறு அவர் வீரச்சாவடைந்த நவம்பர் 27 ஆம் திகதியே   மாவீரர் நாளாய் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாளிலிருந்து  முழு வடிவில் கட்டமைக்கப்பட்ட ரீதியில்    பரந்த மக்கள் மத்தியில்  மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது

கிமு 480 ஆம் ஆண்டு  அதாவது இற்றைக்குச் சரியாக 2499 ஆண்டுகளுக்கு முன்பு  பாரசீக பெரும்படையை எதிர்த்து கிரேக்க  ஸ்பாட்டா மன்னன்    லியோனி தாஸ் தலைமையில் 300 வீரர்கள் வீரச் சமராடி  தேர்மோபொலி  ( Thermopoylae) என்னும் இடத்தில் வீரச்சாவடைந்தனர்.

அவர்கள் வீரச்சாவடைந்த அந்த இடத்தில் பளிங்குக்  கல்லில்  அமரத்துவம் வாய்ந்த பின்வரும்   வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

""இவ்வழியால் செல்பவர்களே ஸ்பார்ட்டா என்னும் நங்கையிடம் போய்ச் சொல்லுங்கள் அவளின் வார்த்தைகளுக்குப்
பணிந்து  நாங்கள் இங்கு  சாய்ந்து கிடக்கிறோமாமென்று.""
( "" Go tell to Sparta,  thou that passest by, That here  obedient to her words we lie"" ).


வரலாற்றில் தம் மக்களுக்காகவும் ,  தம்    தாய்  மண்ணுக்காகவும், விடுதலைக்காகவும் , உரிமைக்காகவும்,    நீதிக்காகவும் போராடித் தம்  வாழ்வை,   தம் உயிரை அர்ப்பணிக்கும்   மாந்தர்கள்  மனிதகுலத்தின்  முழுநீள வரலாற்று  இரத்தோட்டத்தில்   தாமும்    இரத்தத் துளிகளாய்க் கலந்து  காலங்களை கடந்து வரலாற்றின் உயிரோட்டமாய் இயங்கிக் கொண்டிருப்பர். மாவீரர்களையும் நீதிமான்களையும் வரலாறு அன்னை எப்போதும் தன் மடியில் அணைத்து வைத்திருப்பாள்.

தமிழீழ மாவீரர்கள் ஆரம்பத்தில் புதைக்கப்படவில்லை எரிக்கப்பட்டார்கள் .  ஆனால் 1991 ஆம் ஆண்டு  ஆனையிறவு இராணுவ தளத்தின் மீதான  புலிகளின் தாக்குதலைத்  தொடர்ந்து மாவீரர்கள் எரிக்கப்படாமல் புதைக்கப்படும் மரபு உருவானது.  இதற்கு முன்பு ஆங்காங்கே சூழ்நிலைக்ககேற்ப சில மாவீரர்கள் புதைக்கப்பட்டாலும்   அது  ஒரு  முழுநீள   மரபாக மேற்படி ஆனையிறவு தாக்குதலின் பின்பு உருவானது. இது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒன்றல்ல.  அதுவும் சூழலின் நிர்ணயமாகவே அமைந்தது.

மேற்படி   ஆணையிறவுத் தளத்தின் மீதான தாக்குதலின் போது எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிடவும் அதிகமான போராளிகள் வீரச்சாவடைந்தனர் .  வீரச்சாவடைந்தோரை எரிப்பதற்காக வெட்டப்பட்ட காட்டு விறகுகளைவிடவும் மேலதிகமாக பெருமளவிற்கு விறகு தேவைப்பட்டது.  எனவே  வீரச்சாவடைந்தோரைப்  புதைக்க   வேண்டிய நிலை இயல்பாகவே  உருவானது.

புலிகள் இராணுவத் தாக்குதல்கள் இரகசியமாக   மேற்கொள்ள  வேண்டியிருந்த நிலையில் காட்டு  விறகுகளை   பெருமளவில் வெட்டும் போது  தாக்குதலுக்கான திட்டங்கள் முன்கூட்டியே வெளியே  கசிக்கக்கூடிய      நிலையும் காணப்பட்டது.   இப்பின்னணியில் மாவீரர்களின் உடலங்களை   புதைக்கும் நிலைக்கு புலிகள்  சூழலின் நிர்ப்பந்தத்தால்  தள்ளப்பட்டனர்.

ஆனால் புதைக்கப்பட்ட  பின்னணியில் கல்லறைகளைக் கட்டி அவற்றைப்  பேணிப் பூசித்து  வரலாற்றுச் சின்னங்களாய் போற்றக்கூடிய வாய்ப்பிருப்பதை  நடைமுறையில் கண்டு கொண்டனர்.

தமிழீழ மண்ணில் ஆனைக்கோட்டை பில்   கிமு  5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருங்கற்கால பண்பாட்டுக்குரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட முழுநீள மனிதனின் எலும்புக்கூடானது    கிழக்கு மேற்காக புதைக்கப்பட்டிருந்தது.  அத்துடன் தொலைக்கப்பட்ட அந்த புதைகுழியை சூழ்ந்து  மண் சட்டிகளில்  உணவுகள் படைக்கப்பட்டதற்கான தடயங்களும்   காணப்பட்டன.

மேலும் சங்ககாலத்தில்  காணப்பட்ட நடுகல் வழிபாடும் தமிழரின்  பண்பாடானது   வீரர்களின் உடல்களை புதைத்துப்  பூசிக்கும்  வேரைக் கொண்டிருந்ததை புலிகள் கருத்தில் எடுத்தனர் .    இத்தகைய பின்னணிகளில்   மாவீரர்களின்  உடலங்களை புதைத்து   மாவீரர் துயிலும் இல்லங்களை  வடிவமைக்கலாயினர்.

எதிரியேயாயினும்  இறந்தோரின் உடலங்களுக்கு  மரியாதை செலுத்துவதென்பது மனிதகுலம் அடைந்திருக்கும்  ஒரு சிறப்பான  வரலாற்றுப்  பெறுபேறுகளில்    ஒன்றாகும். ஆனால் அதற்கு எதிர்மாறாக  மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தகர்த்து அழிக்கும் பண்பாட்டு அழிப்பு செயலில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டனர்  என்பது முயமான வேதனைக்குரிய வரலாற்று பதிவாகும்.

மாவீரர்களை நினைவு கூர்வது என்பது வெறுமனே விழாக்களை எடுப்பது மட்டுமல்ல;   கூடவே அவர்களது இலட்சியங்களை அடைவதற்கான வழிவகைகளைத்தேடி   அதை நோக்கி முன்னேறுவது என்பதுமாகும்.

முளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்பு  ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவொன்று தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருப்பது மாவீரர்களுக்கான மரியாதையின் ஓர் அங்கமாய் வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டியதாகும்.

அதாவது யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக  மாணவர்களின் முன் முயற்சியால்   ஆறு  தமிழ் கட்சிகள் ஒன்று பூட்டப்பட்டு  13 அம்ச கோரிக்கைகள் உருவாக்கப்பட்டன.  திம்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட  கோரிக்கைகளை மேலும் பலப்படுத்தும் வகையில்    அதன்  வரலாற்றுச் சுவடியில்  கால் பதித்த ஒன்றாய் அந்த 13 அம்ச கோரிக்கைகள் அடங்கின. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையால் மட்டுமல்ல    வேறெந்த பெரும்புயல்களாலும் இடிமுழக்கங்களாலும்   தமிழ் மக்களின்  நீதியான ஜீவாதாரமான   அடிப்படை  நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்பதை இந்தக் கோரிக்கைகள்  மீண்டும் ஒருமுறை வரலாற்று அகராதியில்  எழுத்தாணி கொண்டு ஆழப்பதித்துள்ளன.  இதில் முதல் நிலை மதிப்புக்குரிய பாத்திரத்தை பல்கலைக்கழக மாணவர்கள் வகித்துள்ளார்கள் என்று வரலாறு மீண்டும் மீண்டும் எதிர்காலத்தில் எடுத்துரைக்கும்.

ஆதலால்    விடுதலைக்கான தமிழ் மக்களின் வரலாறானது   ஒரு போதும் கருகிப்போகாதென்பதை     இது  நிரூபித்து நிற்கின்றது.

தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக மாவீரர்களின் பெயரால் இப்போது செய்யவேண்டிய பிரதான பணி   விடுதலைக்கு வேண்டிய வகையில் நடைமுறைச் சாத்தியத்துக்குரிய ஒரு வெளியுறவுக் கொள்கையை முதலில் வரைந்தாக வேண்டும். அறிஞர்களே,  பெரியோர்களே , தலைவர்களே   மற்றும் புத்திமான்களே  புத்தி பூர்வமாக நடைமுறைச் சாத்தியமான ஒரு   வெளியுறவுக்  கொள்கையை முதலில் வரைந்து   முன்வையுங்கள்.  இதற்கான   முன்முயற்சிகளில்  ஈடுபடுவதுதான்  உடனடி அர்த்தத்தில் மாவீரர்களுக்கு செலுத்தும் பெரும் மரியாதையாக அமையும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.