உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டால் அதிமுகவே காரணம்: ஸ்டாலின்!

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக அரசுதான் முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலை நிறுத்துவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தனர். இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக வார்டு மறுவரையறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவம்பர் 29) செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடத்தவில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி யாரவது நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறுவார்களா என்ற நோக்கத்தோடுதான் செயல்படுகிறது. தேர்தலை நிறுத்துவதற்கான எல்லா சதித் திட்டங்களையும் தீட்டி அதற்கான வழிவகைகளை நிறைவேற்றிவிட்டு, திமுகதான் நீதிமன்றத்திற்குச் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தியது, தற்போதும் முயற்சித்து வருகிறது என முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை தவறான குற்றச்சாட்டை சொல்லிவருகிறார்கள். அவர்கள்தான் அரசியல் ஆதாயத்திற்காக செய்கிறார்கள் என்றால் ஊடகத்தினரும் திமுகதான் தடை பெற முயற்சிப்பதாக செய்திகள் வெளியிடுகிறீர்கள். இது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது” என்று தெரிவித்தார். இப்போது ஒரு உண்மையை சொல்லப்போகிறேன் என்று கூறிய ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசு செய்துள்ள குழப்பங்களை பட்டியலிடுகிறேன். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறை பணிகளை அரசு இதுவரை செய்யவில்லை. புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை பணிகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பதவிகளில் பட்டியலின மற்றும் பழங்குடிப் பெண்களுக்கு இன்னும் இடஒதுக்கீட்டை அதிமுக அரசு இன்னும் அளிக்கவில்லை. அதுபோல மாவட்ட ஊராட்சிகளுக்கான ஒதுக்கீட்டையும் செய்யவில்லை. இதுதான் இன்றைய நிலை” என்று குறிப்பிட்டார். மேலும், “அதுமட்டுமல்லாமல் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்துவிட்டு, தற்போது மறைமுகத் தேர்தல் நடத்த அரசாணை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்படி பல குளறுபடிகளை செய்து, இதன் மூலம் தேர்தலை நிறுத்திவிடலாம் என்கிற எண்ணத்தில்தான் இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. முறைப்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் முறைப்படுத்தாமல் தேர்தலை நடத்தினால் அதனையும் சந்திக்கத் திமுக தயாராக இருக்கிறது” என்றும் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.