கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம்!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்புக்காக 3,500 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 6-ம் நாளான இன்று (சனிக்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும்.
மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைகிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார். பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சுவாமி தன்னுடன் ஆட்கொள்கிறார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார்.
சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில் கோவில் வளாகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட கணினி மயமான திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை காவல் துறை சூப்பிரண்டு பாரத் தலைமையில், சுமார் 3 ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
7-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.