துப்பாக்கியை மாற்றிய தோட்டா!
தனுஷ் நடித்து, பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் உறுதிபடுத்தப்பட ரிலீஸ் தேதியை வேல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் தனுஷ், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் துவங்கியது. கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஒன்றாக எண்டெர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவு பெற்று பல மாதங்களுக்கு முன்னரே திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பைனான்சியர்களுக்கும் இடையே எழுந்த கடன் பிரச்சினையின் காரணமாக ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மிகப்பெரிய வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் நவம்பர் 15 ஆம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் உறுதியாக ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்தார். தற்போது அந்த தேதியிலும் மாற்றம் ஏற்பட்டு நவம்பர் 29 ஆம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் நிறுவனம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
The Most expected movie of the year #EnaiNokiPaayumThota Will be released worldwide on Nov 29th.@VelsFilmIntl #VelsFilm #ENPT #ENPTFromNov29th @dhanushkraja @menongautham @akashmegha @SasikumarDir @TheSunainaa @DarbukaSiva @EscapeArtists pic.twitter.com/trxm5W9Rq4— Vels Film International (@VelsFilmIntl) November 2, 2019
வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஒன்றாக எண்டெர்டெயின்மென்ட் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் நிகழ்த்திய சாதனை வெற்றி இந்த திரைப்படம் குறித்தும் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், செந்தில் வீராசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை