ஜனாதிபதியை விட பிரதமருக்கே அதிகாரம்!

அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவானதும் போதைப்பொருள், மோசடி மற்றும் மத அடிப்படைவாதம் ஆகிய மூன்றுக்கும் எதிராக போர் தொடுக்க இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் தெரிவித்தனர்.


புது ஜனாதிபதியாக செயற்பட இருக்கும் அவர் தமது அமைச்சரவையில் மோசடியுடன் தொடர்புள்ள எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாஸவின் 'சஜித்தின் சமூக புரட்சி' தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ஹர்ச டி சில்வா, அஜித் பி.பெரேரா மற்றும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன ஆகியோர் கருத்து தெரிவித்தார்கள்.

அமைச்சுப் பதவி எதுவும் வகிக்காத போதும் சகல அமைச்சுக்கள், நிறுவனங்கள் என்பவற்றை மேற்பார்வை செய்ய மேற்பார்வை செயலணி ஒன்றை உருவாக்க சஜித் பிரேமதாஸ திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், புரட்சிகர மாற்றங்களினூடாக நாட்டை புதிய பரமாணத்திற்குக் கொண்டு செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

அமைச்சர் சம்பிக்க ரனவக்க கூறுகையில், சஜித் பிரேமதாஸவின் புரட்சிகர ஆட்சியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான அடித்தளமாக இந்த விஞ்ஞாபனம் அமைகிறது.போதை ஒழிப்பு, அரச தனியார் துறையில் புற்று நோயாக பரவியுள்ள மோசடி, மத அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மூன்று யுத்தங்களை அவர் முன்னெடுக்க இருக்கிறார்.

இதனூடாக பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். மூலோபாய மாற்றங்களும் மேற்கொள்ளப்படும். சஜித் பிரேமதாசவின் பலமான அரசியல் மாற்றங்கள் இடம்பெறவிருக்கிறது. 1956, 1977 களில் இடம்பெற்றது போன்ற புதுயுகம் மலரும். விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்கள் செயற்படுத்தப்படுகிறதா என மீளாய்வும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறுகையில், மோசடியுடன் தொடர்புள்ளவர்களுக்கு தமது அமைச்சரவையில் இடமில்லை என சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். குடும்ப உறுப்பினர்களுக்கு அரச பதவிகள் வழங்குவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சஜித்தின் சமூக பொருளாதார திட்டங்கள் ஜனாதிபதியானதும் முன்னெடுக்கப்படும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். முன்பள்ளி ஆசிரியர்களையும் ​ஆசிரிய ​சேவையில் இணைக்கவும் பல்கலைக்கழகம் தெரிவாகாத மாணவர்களுக்கு வேறு துறைகளில் தொழில்வாய்ப்பு பெறும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு உள்ளூராட்சி சபை, பாராளுமன்றம் தேசியப்பட்டியல் என்பவற்றிலும் 25 வீத ஒதுக்கீடு வழங்க அவர் முன்வந்துள்ளார். இளைஞர் யுவதிகளுக்கு தொழில் ஆரம்பிக்க 10 பில்லியன் நிதி ஒதுக்கவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் ஹர்ச டி சில்வா கூறுகையில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானதும் 3 யுத்தங்களை அவர் முன்னெடுக்க இருக்கிறார். போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்தின் போது போதைக்கு எதிரான நீதிமன்றம் அமைக்கவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புபிரிவை மேலும் பலப்பபடுத்தவும் சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்கவும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வெளியில் வரமுடியாதவாறு மன்னிப்பற்ற ஆயுள் தண்டனை வழங்கவும் புதிதாக மதுபானச்சாலை அனுமதிப்பத்திரம் வழங்குவதை நிறுத்தவும் முடிவு செய்துள்ளார்.

இரண்டாவது யுத்தம் இலஞ்ச ஊழலுக்கு எதிராக மோசடியுடன் தொடர்பற்றவர்களை இணைத்தே அவர் புதிய பயணத்தை மேற்கொள்வார். இலஞ்சம் பெறுவோருக்கு மட்டுமன்றி இலஞ்சம் கொடுப்போருக்கு எதிராகவும் தண்டனை வழங்க சட்ட திருத்தம் செய்யப்படும்.அமைச்சர்கள் ,எம்.பிகளின் சொத்துவிபரம் ஒன்லைனில் வெளியிடப்படும்.

அடுத்து மத அடிப்படைவாதத்திற்கு எதிரான யுத்தம் சகல இனங்களையும் பாதுகாப்பதாக பகலில் கூறி இரவில் இனவாதத்தை பரப்புபவர்கள் தான் எதிரணியில் உள்ளனர்.மத அடிப்படைவாதத்தை பரப்புவோருக்கு எதிராக தண்டனை வழங்கப்படும்.மத தலைவர்கள் அடங்கிய நல்லிணக்க சபை உருவாக்கப்பட்டு நல்லிணக்கத்திற்கு அடித்தளம் இடப்படும் என்றார்.

அமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டதாவது, சகல தரப்பினர் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸவின் விஞ்ஞாபனம் தான் முன்வைக்கப்பட்ட சகல விஞ்ஞாபனங்களிலும் சிறந்தது.

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எந்த அமைச்சும் வைத்திருக்க முடியாது. எனவே சகல அரச நிறுவனங்களையும் கண்காணிக்கும் வகையில் மேற்பார்வை செயலணி ஒன்றை உருவாக்க அவர் முடிவு செய்துள்ளார்.

அமைச்சு பதவி வகிக்க முடியாத போதும் இன்னும் நிறைவேற்று அதிகாரமுள்ள பலமான ஜனாதிபதிதான் நாட்டில் இருப்பார். பிரதமருக்கே அதி அதிகாரமிருக்கும் என்பதில் உண்மை கிடையாது.

அரச துறை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவற்றை மேற்பார்வை செய்து குறைபாடுகளை சரி செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். 5 வருட காலத்தில் நீதிமன்ற துறை டிஜிடல் மயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.