மறப்போமா...!"மேஜர் ஓவியன்"

யாழ்ப்பாணம் கனகம்புளியடி சந்தி தன் உடல் மீது ஏறி வரும் தனது  குழந்தைகளின் மகிழ்வில் பூரித்துகிடந்த இன்றைய நாள் எங்கள் தேச வரலாறும் கனகம்புளியடி மண்ணும் குருதிபடிந்த நாளாக பதிந்து கொண்டன. சிங்களத்தின் கொடுங்கோலை சிதறடிக்க எழுந்த புலிமறவர்களின்   வரிசையில் அவனும் கரங்களில் கருவி கொண்டு தேசத்து எதிரிகளை திணறடித்த நாட்களை மறக்க முடியாது. அவன் அவனாகவே இருப்பான். 
அவன் எப்போதும் சண்டைகளை பற்றியே சிந்திப்பவன், எங்கள் மக்கள் வாழ வேண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். அதனாலோ என்னவோ பாரதிபுரம் கிளிவெட்டி என்ற மூதூரின் ஒரு கிராமத்தில் பிறந்து விடுதலைக்காக தனது உடல் உயிர் ஆவி அனைத்தையும் கொடுக்க துணிந்த போராளியாக வடதமிழீழம் வந்திருந்தான். தேசியத்தில் தலைமையையும் மக்களின் சுதந்திரக்காற்றையும் மனதில் நிறுத்தி தனது சண்டைக்களங்களோடு வாழ்ந்து வந்தான். 
அவசரமாக கிடைத்த வேவுத்தகவல்கள் தாக்குதல் திட்டங்களாக வகுக்கப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் எங்கள் மக்களுக்கும் விடுதலை போராட்டத்துக்கும் பல தடைகளாக இருந்த அந்த காவலரணை தகர்க்க அவனும் அவனது அணியும் புறப்படுகிறது. தாக்குதல் நடந்து அணி தளம் மீண்ட போது கனகம்புளியடி காவலரணின் மறைவின் ஒளியாக அவன் அந்த மண்ணை முத்தமிட்டிருந்தான். மேஜர் ஓவியன் என்ற தரம் தாங்கிய சந்தனப்பேழையின் உறைவிடமாக.

நினைவில் 
[இரத்தினம் கவிமகன்]
Powered by Blogger.