தடையை மீறி போராட்டம்!!
குடியுரிமை திருத்த மசோதா சட்டமாக இயற்றப்பட்ட நாள் முதலே நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாநில தலைநகர், முக்கிய நகரங்கள், மாவட்டங்கள் எனப் பல இடங்களில் போராட்டம் தீயாய் பரவியுள்ளது. மாணவர்கள், அரசியல் கட்சியினர், இடதுசாரி அமைப்பினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதும், வாகனங்களுக்கு தீ வைப்பதும் எனக் கலவரமாக மாறி நாட்டில் அமைதியின்மை நிலவி வருகிறது.
வள்ளுவர் கோட்டம்-சென்னை
‘குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான மக்கள் இயக்கங்கள்’ என்ற பேரில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் இன்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது இந்திய அரசியலமைப்பைக் கேள்விக் குறியாக்கும் இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் என 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தார்த், “குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் ஆவணம் இல்லை என்றாலும் இந்தியராக்குவோம் என்று சொல்கிறார்கள் அப்படியெனில் இஸ்லாமியர்கள் இந்தியன் ஆகக் கூடாது என்று இவர்கள் நினைப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். ”குடியுரிமைக்கு எதிராகப் போராடுவதற்கு மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது. நாம் அமைதியாகப் போராட வேண்டும். உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படும். எனவே கவனமாகக் குரல் கொடுக்க வேண்டும். போராடுவதை நிறுத்தக்கூடாது” என்றும் தெரிவித்தார்.
வள்ளுவர் கோட்டத்தில் போராடுவதற்கு போலீசார் அனுமதி மறுத்தது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ”சென்னை காவல் ஆணையராக இருப்பவருக்கு எனது வேண்டுகோள். தயவு செய்து வள்ளுவர் கோட்டத்தில் எழுப்பும் ஜனநாயக குரலை ஒடுக்க வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், போராட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதுபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் பல கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசம், டெல்லி, பிகார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று போராட்டம் வெடித்துள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, ஹசட்கஞ்ச், சாம்பால் ஆகிய பகுதிகளில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சாம்பால் பகுதியில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்துக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுபோன்று ஹசட்கஞ்ச் பகுதியில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. கல் வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டதால் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், சாம்பால் மாவட்ட மாஜிஸ்திரேட், மறு உத்தரவு வரும் வரை சாம்பால் பகுதியில் இணையச் சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் 20 இருசக்கர வாகனங்கள், 3 பேருந்துகள், 4 மீடியா வேன்களுக்கு தீ வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
டெல்லி
டெல்லி செங்கோட்டையில் 144 தடையையும் மீறி இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ,அரசு பிரிட்டிஷ் அரசாங்கம் போல் செயல்பட்டால் நாங்கள் பகத் சிங் போல் நடந்துகொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். மண்டி ஹவுஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கூறுகையில், கடந்த 4 மாதங்களாகக் காஷ்மீர் முடங்கியது. அது தற்போது இங்கு நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். 144 தடையை மீறி ஜந்தர் மந்தரிலும் போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே டெல்லியில் பல பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது. வோடாஃபோன் மற்றும் ஏர்ட்டெல் நிறுவனங்கள் தங்களது சேவைகளை நிறுத்தியுள்ளன. அரசு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக டெல்லி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் டெல்லி மக்கள்.
144 தடை உத்தரவு மற்றும் குர்கான் உட்பட டெல்லியைச் சுற்றியுள்ள பிற மாநில பகுதிகளில் இருந்து வாகனங்கள் உள்ளே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குர்கானில் இருந்து டெல்லி வரும் சாலை முழுமையாக முடங்கியுள்ளது.
ஹைதராபாத், பெங்களூரு என பல பகுதிகளிலும் போராட்டம் பரவியுள்ளது.
உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை
போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சகம் சார்பில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் உள்துறைச் செயலர், உளவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதுபோன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நாட்டில் நிலவும் அமைதியின்மை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ட்விட்டரில் ”டெல்லியில் ஏன் இணையச் சேவை முடக்கப்பட்டது? டெல்லி வாசிகள் நகர்ப்புற நக்சலாகிவிட்டார்களா? காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டை கொண்டாடும் வேளையில், நாட்டில் அமைதியாகக் கூடிப் போராடும் உரிமை நாட்டு மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை