உள்ளாட்சித் தேர்தலுக்கு பாதிப்பா? எடப்பாடி!
உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நிறைவு நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று (டிசம்பர் 19) நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, விமான நிலையத்தில் பூங்கொத்து அளித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.அங்கிருந்து டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
பின்னர் டெல்லியில் ஷாகேத் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தை முதல்வர் பார்வையிட்டார். முதலமைச்சருடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் உடனிருந்தனர். என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, எப்போது பணிகள் முடியும் என்பது குறித்து தளவாய் சுந்தரம் எடுத்துக்கூற, சில ஆலோசனைகளையும் வழங்கினார் எடப்பாடி.
மாலை 4 மணியளவில் காந்தி பிறந்தநாள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஜனநாயக நாட்டில் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் தானாகவே கலைந்துசென்றுவிட்டனர். இதனால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஜனநாயக நாட்டில் அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்சினை ஏற்படாது” என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசியவர், “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. வேட்புமனு பரிசீலனை முடிந்துவிட்டது. இனி தேர்தல் உறுதியாக நடைபெறும். அவமதிப்பு வழக்கு என்பது தேர்தல் ஆணையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் உள்ள பிரச்சினை. அரசுக்கு இதில் சம்பந்தம் இல்லை. நீதிமன்றம்தான் அதற்கு தீர்வுகாணும்” என்று கருத்து தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் நடத்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் உள்ளாட்சித் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், இந்தியாவில் வாழக்கூடிய இந்தியர்கள் யாருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டிவிடுகின்றன” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளோம். அவர்களுக்கு அனைத்து நலத்திட்டங்களை செய்து தந்துள்ளோம்” என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை