சல்மான் பணத்தில் சிவகார்த்திக்கு கட்-அவுட்டா?

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ஹீரோ. கதை-திரைக்கதை-வசனம் எழுதி மித்ரன் இயக்கியுள்ள இந்தப்படம் வருமா, வராதா என்கிற கேள்வி நேற்றுவரை சினிமா வட்டாரத்தில் இருந்துவந்தது.
பட வெளியீட்டில் எந்த ஒரு சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற காரணத்தால் படத்தலைப்பு பஞ்சாயத்து, பைனான்ஸ் பஞ்சாயத்து இவற்றிலெல்லாம் சில சமரசங்களுக்கு தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோன்று தலைப்பு பஞ்சாயத்து, கதை திருட்டு பிரச்சினை தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருந்து வருவதால் பட வெளியீட்டில் இறுதி நேரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னணி விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தின் ஏரியா உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்றது. அதற்கு பின்னர் நாளைவெளியாகும் ஹீரோ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து வேறு எங்கும் இந்த படத்திற்கான முன்பதிவு ஜீரோவாக இருப்பதைக்கண்டு திரையரங்கு மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஹீரோ படத்துக்கு அனைத்து உரிமைகளுக்கும் அட்வான்ஸ் மட்டுமே தயாரிப்பாளரால் பெறப்பட்டுள்ளது. அதனால் விநியோகஸ்தர்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என்பதோடு விநியோக உரிமையில் ஹீரோ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தியேட்டர்களில் படத்தை திரையிட மினிமம் கியாரண்டி அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
படத்தின் வெற்றி தோல்வி திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளரை மட்டுமே சார்ந்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு முன் பணம் வாங்குவதற்கு தயாரிப்பு தரப்பு முயற்சித்தனர். நாளை உலகம் முழுமையும் வெளியாகக் கூடிய இந்திய படங்களில் முதலிடத்தில் இருப்பது தபாங்க் 3 எனும் சல்மான் கானின் படம். அந்தப் படத்துக்கு தமிழகத்தில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பொறுப்பு கே .ஜே. ஆர் ஸ்டூடியோஸ் வசம் உள்ளதால் ஹீரோ படத்தின் இலவச இணைப்பாக தபாங் 3 படத்தின் விநியோக உரிமையும் வழங்கப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களை தயாரிக்கும் நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் என்கிற பிம்பம் மும்பை சினிமாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதன் விளைவு, எந்தவிதமான முன் பணமும் வாங்காமல் தபாங் 3 படத்தின் தமிழக உரிமை கே.ஜே.ஆர்-க்கு வழங்கப்பட்டுள்ளது. படத்தை பிரமாண்டமாக தமிழகத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று சல்மான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள தனி விமானம் மூலம் சல்மான்கான், பிரபுதேவா மற்றும் பட குழுவினர் வந்து சென்றனர்.
தபாங் 3 படத்தை தமிழகத்தில் விளம்பரம் செய்வதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தரப்பில் செலவு கணக்கு கொடுக்கப்பட்டதாகவும், சல்மான்கான் தரப்பு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு விளம்பரம் செய்தால் போதுமானது என இறுதி செய்யப்பட்டு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கே ஜே ஆர் ஸ்டுடியோவை பொருத்தவரை ஹீரோ படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடுவது அதற்கான விளம்பரங்களை செய்தால் போதுமானது என்ற மனநிலையில் செயல்படுவதாக பேசப்படுகிறது. இதனால் தபாங் 3 படத்திற்கு குறைவான திரையரங்குகள் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கான விளம்பரங்களும் போதுமான அளவிற்கு இல்லை என்கிற பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு இப்போது மும்பை வரை எதிரொலிக்கிறது. பட வெளியீட்டிற்கு பின்னர் இது சம்பந்தமாக பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்கின்றனர் விஷயமறிந்த சினிமா பிரபலங்கள்.
-இராமானுஜம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.