ஏன்‌ மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தேவைப்படுகிறது?

இந்தியாவிலேயே அதிக அளவு மத்திய மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை கொண்டது தமிழ்நாடு‌‌. அதே போல
இந்தியாவிலேயே அதிகளவு பொறியியல் கல்லூரிகளை கொண்டது தமிழ்நாடு.. இதன் மூலம் 3,397 பொறியியல் முனைவர்கள் (PhDs) 2015-16ல் மட்டும் உருவாகியுள்ளனர்‌. இது இந்திய அளவில் எடுத்தால் 16.44%. தற்போதைய 2018-19ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் இன்னும் அதிகம்‌‌.. தவிர அண்ணா பல்கலைக்கழகம், வி.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி, எஸ்.ஆர்‌.எம், சாஸ்த்ரா, அமிர்தா, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு எளிதாக சென்று ஆராய்ச்சி படிப்பை தொடருகிறார்கள்.. அதிலும் தமிழ்நாடே முதலிடம்‌‌..

தெரிந்தோ தெரியாமலோ எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தன் விசுவாசிகள் பெயரில் கல்லூரி ஆரம்பித்து வைக்க அவரது இறப்புக்கு பிறகு அவை அனைத்தும் அசூர வளர்ச்சி பெற்றுவிட்டன. கல்லூரிகளின் கொள்ளை ஒரு பக்கம் இருந்தாலும் அண்டை மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிகம் மாணவர்கள் படிக்கும் இடமாக தமிழ்நாடு இருக்கிறது.

முனைவர்கள் எந்த அளவு இருக்கிறார்களோ அதை வைத்து தான் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலும்.. அப்படி மத்திய அரசு தனியார் மற்றும் வெளிநாட்டு நிதி (funding) பெரும்பாலும் தமிழ்நாட்டுக்கே வருகிறது. நமது மக்கள் தொகைக்கும் நிலப்பரப்பிற்கும் நாம் கல்வி ரீதியாக வளர்ந்துள்ள விகிதத்தை வட இந்தியா அடைய நீண்ட காலம் பிடிக்கும்..

கவலைக்குறிய விடயம் என்னவென்றால் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இந்த வருடம் 2018-19ல் பகுதி நேரமாக பொறியியல் முனைவர் ஆய்வை மேற்கொள்ளும் துணை பேராசிரியர்களின் எண்ணிக்கை 12 மட்டுமே! எல்லாம் சூரப்பா கைங்கரியம். இவர் வருவதற்கு முன்பு இதைவிட 5-6 மடங்கு அதிகம் பேர்‌ முனைவர் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.. என்னதான் இருந்தாலும் முழுநேரமாகவும் ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்து கொண்டே முனைவர் படிப்பவர்களையும் அவரால் ஒன்றும்‌‌ தடுக்க முடியவில்லை‌‌.. பல்கலைக்கழகத்தை வளைத்தால் இதுக்கும் பிரச்சனை வரலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் மனிதவளத்தையும் பொருள் வளத்தையும் திருடினால் அதை வைத்து ஆயிரக்கணக்கான வட இந்திய பொறியியல் முனைவர்களை உருவாக்கலாம்.. ஆனால் யார் காசில் உருவாக்கிய பல்கலைக்கழகத்தை யார் பயன்படுத்துவது!? தமிழர்களின் ரத்தமும் சதையுமான அண்ணா பல்கலைக்கழகத்தை அன்னியருக்கு தாரைவார்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை‌‌..

தமிழக அரசு சார்பில் கலந்து கொள்ளும் அமைச்சர் பெருமக்கள் பல்கலையின் உரிமை தமிழக அரசின் கீழ் இருப்பதையும் தமிழகத்தின் இட ஒதுக்கீடு தொடர்வதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் கல்வியில் முன்னேறிய மாநிலம் தமிழகம் என்று அடுத்த தலைமுறை சொல்ல முடியாது. நாங்கள் கல்வி கற்று பணியில் நுழைந்தவர்கள்.. இன்றைய தலைமுறை தான் பப்ஜி, டிக்டாக், ஐ.பி.எல், பிக்பாஸ், சினிமா இவற்றை தாண்டி இதைப்பற்றி தீவிரமாக பேச வேண்டும்..

"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை".

'அழிவில்லாத சிறந்த செல்வம்' என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.