நிர்பயா வழக்கு: 2ஆவது குற்றவாளியின் மனுவும் தள்ளுபடி!
நிர்பயா வழக்கில் பவன் குப்தா என்ற குற்றவாளி தூக்குத் தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து நான்காவது குற்றவாளியான அக்ஷய குமார் சிங் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஆனால் அவருக்குக் குடியரசுத் தலைவரிடம் மனுத் தாக்கல் செய்ய ஒரு வாரம் கால அவகாசத்தை டெல்லி நீதிமன்றம் வழங்கியது. இதற்கு நிர்பயா தாய் எதிர்ப்புத் தெரிவித்தார். குற்றவாளிகளின் உரிமையைப் பார்க்கிறீர்கள், அப்படியானால் எங்கள் உரிமை என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், வழக்கின் 2 ஆவது குற்றவாளியான பவன் குப்தா டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2012 ஆம் ஆண்டு போலீசார் தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதனால் தனக்குச் சிறார் சட்டப் பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், வழக்கில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இதற்கு நிர்பயா தாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனையடுத்து உடனே தனது உத்தரவைத் திரும்பப் பெற்ற நீதிமன்றம் பவன் குப்தாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு, இவ்விவகாரத்தில் கால தாமதம் ஏற்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஏ.பி.சிங்கிற்கு நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை