தடுப்பு முகாமில் இருந்தபோது ஏற்பட்ட ஏக்கங்கள்!!

முட்கம்பி இல்லாத வாழ்க்கைக்கு ஏங்கினோம்..?


காயத்திற்கு மருந்துகட்ட ஏங்கினோம்

நோய்வந்தபோது மருந்துக்கு ஏங்கினோம்..?

எம்மோடு தடுப்பில் ஒன்றாக இருந்தவள் நோய்முற்றி மருத்துவமனை கொண்டு சென்றதன்பின் மரணித்தபோது இறுதியாக அவள் முகம் பார்க்க ஏங்கினோம்..?

விசாரணைக்கு கூட்டிச் செல்லப்பட்டவள் மீண்டும் நம்மிடம் திரும்பி வருவாளா என்று ஏங்கினோம்..?

சரணடைந்ததை எண்ணி தன்னிலை மறந்து புலம்புபவள் மீண்டும் நலமாக வேண்டும் என்று ஏங்கினோம்..?

காணாமல்போன போராளிக் கணவன் எங்கேனும் ஒரு தடுப்பு முகாமிலாவது இருக்கவேண்டும் என்று ஏங்கினோம்..?

நாம் சரணடையும்வரை நம்மை பாதுகாத்து கூட்டிவந்த போராளித்தோழர்களிற்கும் எம்மை அரவணைத்து கூட்டிவந்த பொதுமக்களிற்கும் நன்றி கூற வேண்டும் என்று ஏங்கினோம்..?

இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த எம் பெற்றோர் எந்த முகாமில் இருக்கிறார்கள் என்று அறிய கடிதம்போட்டு தேட அனுமதிப்பார்களா என்று ஏங்கினோம்..?

முட்கம்பியின் மறுபக்க கட்டடத்தில் இருக்கும் போராளித் தோழிகளோடு கதைக்க வேண்டும் என்று ஏங்கினோம்..?

தடுப்பில் இருக்கும் எங்களை எமது பெற்றோர் வந்து பார்க்க அனுமதிப்பார்களா என்று ஏங்கினோம்..?

மாறிப்போடுவதற்கு மாற்று உடையிற்கு ஏங்கினோம்..?

பசித்த வயிற்றிற்கு சரியான உணவிற்கு ஏங்கினோம்,

படுக்கும் இடத்தில் இருந்து மறுபக்கம் திரும்பிப்படுக்க ஒரு இடம் கிடைக்குமா என்று ஏங்கினோம்..?

வெட்டைவெளி மண்டப வெட்கையால்வரும் வருத்தங்களை போக்க நிறைந்த தண்ணீரில் குளிக்க ஏங்கினோம்..?

மழைகாலத்தில் படுக்க இடமின்றி நின்மதியான உறக்கத்திற்கு ஏங்கினோம்..?

சரணடைந்துவிட்டோம் எம்மை தண்டிப்பார்களா என்று ஏங்கினோம்..?

இராணுவத்தினரால் கொண்டுவந்து ஒட்டப்படும் போஸ்டல்களில் உள்ள போராளிகள் உண்மையில் இறந்துவிட்டார்களா என்று ஏங்கினோம்..?

துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினரின் பார்வையில் இருந்து தூரஇடம் சென்றுவிட வேண்டும் என்று ஏங்கினோம்..?

புலனாய்வாளர்கள் அடிக்கடி எம்மிடம் விபரம் எடுக்க வரக்கூடாதென்று ஏங்கினோம்..?

அனைத்தையும் கடந்து எப்போது எம்மை விடுதலை செய்வார்கள் என்று ஏங்கினோம்..?

அன்றில் இருந்து இன்றுவரை தொடரும் ஏக்கங்கள்......!

**பிரபாஅன்பு**
Powered by Blogger.