பெண்ணைத் தாக்கிய தீட்சிதருக்கு முன் ஜாமீன்!


சிதம்பரத்தில் பெண் செவிலியரைத் தாக்கிய தீட்சிதருக்கு முன் ஜாமீன் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் முக்குறுணி விநாயகர் சந்நிதிக்கு அர்ச்சனை செய்ய சென்ற பெண் செவிலியர் லதாவை தீட்சிதர் தர்ஷன் கன்னத்தில் அறைந்து அசிங்கமாகப் பேசினார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடா்ந்து தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறையினா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தர்ஷன் தலை மறைவானதால் அவரை காவல் துறையினர் தேடிவந்தனர்.



இதனிடைய சென்னை உயர் நீதிமன்றத்தில் தீட்சிதர் தர்ஷன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில், “பெண் பக்தர் நடைசாத்தும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அவர் என்னை தாக்குவதற்காக கையை ஓங்கியதால் தற்காத்துக்கொள்ளவே அவரை தள்ளினேன். என் மீது போலீசார் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார். முன் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செவிலியர் லதாவும் மனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும் லதாவின் எதிர்ப்பையும் மீது அவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, 15 நாட்கள் இராமேஸ்வரத்தில் தங்கி இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் முன்பாகவும், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாக அலுவலர் முன்பாகவும் தினமும் தர்ஷன் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.