முதல்வருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்


கோவை மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது.


மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை அருகே நடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்து அருகிலிருந்த வீடுகள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த 3 வீடுகள் தரைமட்டமாகித் தூங்கிக்கொண்டிருந்த 17 பேரும் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இடிபாடுகளுக்குள் சிக்கிய 17 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எனினும், அந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறி உறவினர்களும், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் அமைப்பின் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரை, காவல் துறையினர் கடுமையாக தாக்கி இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, 17 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 3) மேட்டுப்பாளையம் செல்கிறார். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வரும் முதல்வருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மத அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் மேட்டுப்பாளையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.