காரைநகர் சு.வை.அ. பணிமனை நடத்திய-குழந்தை வளர்ப்புக் கலை பரீட்சையில் சித்தியடைந்த தாய்மாருக்கு கௌரவம்!📷

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட தாய்மார் கழகத்தில் அங்கத்துவம் வகிக்கும் தாய்மார்களுக்கிடையே குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த தாய்மார்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சைவ மகா சபையில், காரைநகரின் நீர்வளத்தைப் பாதுகாப்பது தொடர்பாக இடம்பெற்ற கருத்தரங்கின்போது மேற்படி தாய்மார்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ப.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ், யாழ்.நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சர்வராசா, காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தாய்மாரைக் கௌரவித்தனர்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் தற்போது இளைஞர் - யுவதிகளிடையே பிறழ்வுக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. இளைஞர்கள் வன்முறை உணர்வு, குரோத மனப்பான்மை உடையவர்களாக வளர்ந்து வருகின்றனர்.

இதனால் வாள்வெட்டுக்கள், கோஷ்டி மோதல்கள், போதைக்கு அடிமையாதல் உள்ளிட்ட சமூகத்திற்கு இடையூறான பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ப.நந்தகுமார் காரைநர் தாய்மார் கழகத்தில் அங்கத்துவம் வகிக்கும் தாய்மார்களுக்கு அவ்வப்போது குழந்தை வளர்ப்பு மற்றும் இயற்கையை நேசித்தல், மனித நேயம் உள்ளிட்ட பல கருத்தரங்குளை நடத்தி வருகின்றார்.

இதன் ஒரு அங்கமாக குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக தாய்மார்களுக்கு இடையே பரீட்சை ஒன்றும் நடத்தப்பட்டது. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உடைய பாலூட்டும் தாய்மார், கர்ப்பவதித் தாய்மார் உள்ளிட்ட 250 வரையானோர் பங்குபற்றினர்.

இவர்களில் 90 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட 18 தாய்மார்கள் காரைநகர் சைவ மகா சபையின் அனுசரணையுடன் கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி பரீட்சைக்கு பங்குபற்றியவர்கள் தமது குழந்தைகளை சிறப்பாக வளர்த்தெடுப்பர் என இங்கு நம்பிக்கை வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.