தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை! 


சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என்று அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான என்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், தமிழ் அரசியல் தலைமைகளும் கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான என்.ரவிகுமார் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

“பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று கூறியிருப்பதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் ஜனாதிபதியின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளதாக அறியக்கிடைத்தது. இதன் உண்மை தன்மை பற்றி தெளிவுபடுத்துமாறும் பிரதமரிடம் கேட்டேன்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ‘ மனோகணேஷன் எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்படுவார். மனோ கணேஷனின் இன வாதத்தை தூண்டும் செயற்பாடே இதுவாகும். அரசாங்கம் இது வரையில் அவ்வாறு எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமானால் அது தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கினால் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்த முடியும். அது குறித்து நாம் சிந்திக்கவுமில்லை. ‘ எனறார்.

இதேவேளை, ஜனக பண்டார தென்னகோன் தேசிய கீதம் தொடர்பில் தகவல் வெளியிட்டாரா என அவருடனும் தொடர்பு கொண்டு கேட்டுன், அதற்குப் பதில் வழங்கிய அவர், அவரும் பிரதமர் கூறியதையே சொன்னார்” என்றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.