ஸ்போர்ட்ஸ் டிராமாவை மாற்றுவாரா தப்ஸி?

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறது வியாகாம் 18 தயாரிப்பு நிறுவனம். இந்தத் திரைப்படத்தில் மித்தாலி ராஜ் கேரக்டரில் நடிகை தப்ஸி நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மித்தாலி ராஜ் கேரக்டரில் தப்ஸி நடிப்பது திடீர் அறிவிப்பு இல்லை. இதற்கு முன்பே பல பேட்டிகளில், இந்தப் படத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என தப்ஸி கூறியிருந்தார். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. அது தப்ஸி தரப்பிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது.


“மித்தாலி ராஜ் வாழ்க்கைக் கதையில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மைதான். ஆனால், இதுவரையில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. எனக்கு விளையாட்டின் மீது அதீத ஆர்வம் உள்ளது. எனக்கு வரும் விளையாட்டு தொடர்பான திரைப்பட வாய்ப்புகளை விரல் விட்டு எண்ண முடியாது. அந்தளவுக்கு வாய்ப்பு வந்தாலும், அந்தத் திரைப்படம் விளையாட்டு தொடர்பானது என்றாலும், எந்தக் கதையை அதில் சொல்லப்போகிறார்கள் என்பது எனக்கு முக்கியமான ஒன்று. அது ஓர் உறுதியான, அழகான பயணத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்” என ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் தப்ஸி.


ஒரு கிரிக்கெட்டரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கும்போது அவரது சாதனைகளையும், ஏற்கெனவே உலகம் முழுவதும் பரவியிருக்கும் புகழையும் மீண்டும் பிரபலப்படுத்துகிறார்களா அல்லது நாம் ரசித்த வீரன் அல்லது வீராங்கனையின் வாழ்வில் சொல்ல வேண்டிய தகவல்களைச் சொல்கிறார்களா என்பதே ஒரு பயோபிக் திரைப்படத்தின் சிறப்பம்சம். உலகப் புகழ்பெற்ற பிரேசிலின் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் கதையை ‘கோல்’ என்ற திரைப்படமாக எடுத்தபோது, அதில் மொத்தத்தில் மூன்று ஆட்டங்களை மட்டுமே காட்டியிருந்தனர். ஆனால், அந்தக் கதை அவரது வாழ்க்கை வரலாறு முழுவதையும் கூறியது. அதுபோலவே, ஆட்டங்களுக்கு சுவாரஸ்யம் கொடுக்காமல் அந்த ஆட்டத்துக்குப் பின்னால் நடைபெற்றவற்றைக் கூற வேண்டியதே ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். ஒரு ராணுவ வீரன் எப்படி போர்ப்பகுதிக்குச் சென்றதும் சண்டையிட்டே ஆக வேண்டுமோ, அதுபோலவே ஒரு விளையாட்டு வீரன் மைதானத்துக்குள் சென்றதும் விளையாடியே ஆக வேண்டும். ஆனால், அந்த மைதானத்துக்குள் செல்லவிடாமல் தடுப்பது எது? அவற்றையெல்லாம் மீறி ஒரு வீரன் எப்படி மைதானத்தில் காலடி எடுத்து வைக்கிறான் என்பதே மிக முக்கியமாக உலகத்துக்குச் சொல்லப்பட வேண்டிய செய்தி. அதையே தான் தப்ஸியும் விரும்பியிருக்கிறார்.
மித்தாலி ராஜ் கேரக்டரில் நடிப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்த தப்ஸி, ‘உங்களுடைய இடத்திலிருந்து நீங்கள் அதிருப்தி அடையாத வகையில் உங்கள் கேரக்டரை பிரதிபலிப்பேன்’ என்று கூறியிருக்கிறார். மித்தாலி ராஜின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும், அவற்றை உறுதியுடன் அவர் எதிர்த்து வெளியில் வந்தார் என்பதையும் தப்ஸியின் கேரக்டர் சிறப்பாகச் சொல்லுமேயானால், இந்தியாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் முதன்மையானதாகவும், முன்னுதாரணமான ஒன்றாகவும் இந்தத் திரைப்படம் அமையும். கிரிக்கெட்டில் சாதித்ததற்கு எப்படி, ‘சபாஷ் மித்தாலி’ என்று அவரது பிறந்தநாளில் கிரிக்கெட் ரசிகர்கள் மித்தாலியை வாழ்த்தினார்களோ, அதேபோல தப்ஸியையும் இந்தியா முழுவதும் வாழ்த்தும்.
Powered by Blogger.