மணல் அகழ்வதற்குத் தடை என ஊர்காவற்றுறை நீதவான் அறிவிப்பு!

யாழ்ப்பாணம் – மண்கும்பான் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


தீவகப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வாய்மூல முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதவான் ஏ. ஜூட்சன் முன்னிலையில், முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் இந்த வாய்மூல முறைப்பாட்டை இன்று சமர்ப்பித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த முறைப்பாட்டை ஊர்காவற்றுறை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

எனினும், பொலிஸாரின் இந்த அறிவிப்பிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததுடன், பொலிஸார் நடவடிக்கை எடுக்காமையாலேயே நீதிமன்றத்தை நாடியதாகவும் கூறியுள்ளார்.

பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களையும் கைது செய்ய தவறும் பட்சத்தில், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்படும் என இதன்போது நீதவான் ஏ. ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், தமது சேவை பெறுநர் தனது சொந்தக் காணியிலேயே மணல் அகழ்ந்ததாகவும் அதற்கு ஆரம்பத்தில் கிராம சேவையாளரின் அனுமதியை பெற்றிருந்ததாகவும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.

இதேவேளை, நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் அகழ்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.

அண்மையில் மணல் அகழ்வு தொடர்பில் வௌியாகிய பத்திரிகை செய்தியின் பிரகாரம் மீண்டும் மணல் அகழப்பட்டதாகவும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.

எனவே, தமது சேவை பெறுநரின் குடும்பநிலையை கருத்திற்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளவருக்கு பிணை வழங்குமாறும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த ஊர்காவற்றுறை நீதவான், சந்தேகநபர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பிணை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, மணல் கடத்தல் தொடர்பில் மண்கும்பான் பகுதியில் இருவேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

தலா 1,50,000 ரூபா சரீர பிணையில் செல்ல சந்தேகநபர்களுக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை இந்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kili+
nochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.