சம்பந்தன் கோட்டாபயவின் கொள்கை விளக்க உரையை எதிர்பர்ப்பு!

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயத்தில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினதும், அவரது அரசினதும் உத்தியோகபூர்வ நிலைப்பாடு யாது? என்பது தொடர்பிலான கோட்டாபய ராஜபக்‌ஷ நிகழ்த்தப்போகும் கொள்கை விளக்க உரையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்தியாவின் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலப் பிரமுகர்களுடன் நேற்றைய தினம் மரியாதை நிமித்தமான இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையின் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை அங்குரார்ப்பணம் செய்து வைத்து ஜனாதிபதி நிகழ்த்தப்போகும் கொள்கை விளக்க உரையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

கோட்டாவினதும், அவரது அரசினதும் கொள்கை நிலைப்பாடு தொடர்பான திட்டவட்டமான தீர்மானத்தை அந்த உரையில் தான் நாம் எதிர்பார்க்கலாம் என்பதாலேயே அதற்காகப் பார்த்திருக்கின்றோம்.

இலங்கை வந்திருந்த பிரதமர் மோடி, எங்களை (கூட்டமைப்பினரை) சந்திப்புக்காகப் புதுடில்லி வருமாறு அழைத்திருந்தார். அந்தச் சந்திப்பு தாமதமாகி வருகின்றது. நாம் விரைவில் புதுடில்லி சென்று அவரைச் சந்திப்போம்.

புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரை அங்குரார்ப்பணம் செய்து வைத்து அடுத்த வெள்ளிக்கிழமை புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உரை நிகழ்த்தவிருக்கின்றார். இதுவே அவரினதும், அவரது அரசினதும், கொள்கை விளக்க உரையாகவும் அமையவுள்ளது.

ஆகவே புதிய அரசுத் தலைமையின் நிலைப்பாடு யாது என்பதை தெளிவாகவும், உறுதியாகவும், கொள்கை ரீதியாகவும் நாம் உத்தியோகபூர்வமாக அறிவதற்கு இதுவே உரிய சந்தர்ப்பமாகும்.

ஆகவே அதனை அறிந்து கொள்வதற்கு நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அவரதும், அவரது அரசினதும் உத்தியோகபூர்வ கொள்கை நிலைப்பாடு யாது என்பது திட்டவட்டமான வாசகங்களில் வெளிப்படுத்தப்பட்டுவிட்டால் அதன் பின்னர் அந்த விடயங்கள், கருமங்கள் தொடர்பில் என்ன செய்வது என்பது குறித்து நாம் முடிவு கட்டக் கூடியதாக இருக்கும்.

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது தொடர்பில் நாங்கள் மட்டுமல்ல, சர்வதேசத் தரப்புகளும் பிற பங்காளர்களும் கூட சில நடவடிக்கைகள், தீர்மானங்களை எடுப்பதற்கு இந்தக் கொள்கை விளக்க உரை வழி செய்யலாம் என எதிர்பார்க்கிறோம்.

இலங்கையில் குறிப்பாகத் தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய முதலீடுகள், வர்த்தக நடவடிக்கைகள் மேம்படுத்தப்படவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான ஊக்குவிப்பை நாங்கள் இரு பக்கத்தினரும் சேர்ந்து செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் அகதிகள் தமது தாயகத்துக்குத் திரும்ப விரும்பினால் எந்தவித இடையூறுகளுமின்றி அதனை மேற்கொள்ள அவர்களுக்கு முழு உதவி, ஒத்தாசை வழங்கப்படவேண்டும் என்றும், அதுவரையில் தத்தமது விருப்பப்படி தமிழகத்தில் அவர்கள் தங்கியிருக்கின்றமை எந்த இடர்பாடுகளும் இன்றி சட்டபூர்வமானதாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலப் பிரமுகர்கள், தமிழக பாரதீய ஜனதாவின் பொதுச் செயலாளர் வானதி ஶ்ரீநிவாசன் மற்றும் பிரமுகர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
Powered by Blogger.