சிஏஏ: நேற்று பன்னீர், இன்று எடப்பாடி!!??

சிஏஏவை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று முதல்வரை நேரில் சந்தித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள்,
சமூக அமைப்புகள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு பல இடங்களில் தேசியக் கொடிகளுடன் பேரணி சென்றுவருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று (ஜனவரி 10) அவரை மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜத தலைவர் தமிமுன் அன்சாரி, முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்டோர் தலைமையில் 23 இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கை மனு அளித்தனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபுபக்கர், “சிஏஏ தொடர்பாக இஸ்லாமியர் சமூகத்தினருக்கு இருக்கும் அச்சங்கள் குறித்து விவரித்தோம். அத்தோடு என்பிஆர், என்சிஆர் பதிவேடுகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள கேள்விகள் மூலம் ஏற்பட இருக்கும் அபாயங்கள் குறித்து எடுத்துச் சொன்னோம். இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடனும், மூத்த அமைச்சர்களுடனும் கலந்துபேசி தெளிவான முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார். எந்த வகையிலும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பதில் சொல்வதாகக் கூறியிருக்கிறார். மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
இந்திய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் பாக்கர் கூறுகையில், “இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்தார். ஜெயலலிதாவின் அரசு இஸ்லாமிய சமூகத்துக்கு சாதகமானதாகவே இருக்குமே தவிர எங்களை மீறி ஒன்றும் வந்துவிடாது என்று சொல்லியிருக்கிறார். இதனை நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேற்று இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்துப் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.