பாலமேடு ஜல்லிக்கட்டு:16 காளைகளை அடக்கிய வீரர்!

பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பதினாறு காளைகளை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர் முதல்பரிசை வென்றார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஜனவரி 16) தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அந்தவகையில் மதுரை பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகுந்த விறுவிறுப்பையும், உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது. சீறி வரும் காளைகளை அடக்குவது பல வீரர்களுக்கும் மிகுந்த சிரமத்தை அளித்ததைக் கண்கூடாகக் காண முடிந்தது. இந்த விளையாட்டுக்கு இடையே மாடுமுட்டியதில் சில வீரர்கள் காயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மாட்டுப்பொங்கல் தினமான இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இந்தப்போட்டிகள் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழுவின் கண்காணிப்பில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் 676 காளைகளும், 650-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
போட்டியின் இறுதியில் 16 காளைகளைப் பிடித்த பிரபாகரன் என்ற இளைஞர் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. அதே போன்று 13 காளைகளை அடக்கிய ஐயப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜா என்பவருக்கு 2-ஆவது பரிசும், பத்து காளைகளை அடக்கிய கார்த்தி என்பவருக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு பரிசுகளுடன் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அதே போன்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளை முதல் பரிசை தட்டிச்சென்றது. அவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள காங்கேயம் பசு, கன்றுக்குட்டியுடன் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசை வென்ற காளையின் உரிமையாளர் செல்வம் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மூன்றாவது பரிசை பழங்காநத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவரின் காளை வென்றது.
இந்தப்போட்டியைக் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு குழுமி இருந்தனர். அவர்கள் சீறி வரும் காளைகளையும் அவற்றை அடக்கிய வீரர்களையும் மிகுந்த உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.