ராஞ்சி ஹெலிகாப்டர் தரை இறங்குகிறதா?

இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) வெளியிட்டுள்ள, இந்திய அணியின் சீனியர் வீரர்கள் கான்ட்ராக்ட் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்திய அணியின் சீனியர் வீரர்கள்
கான்ட்ராக்ட் விவரங்களை பிசிசிஐ இன்று(ஜனவரி 16) வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய வீரர்களை கிரேட்(Grade) வாரியாக பிரித்து, அவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்ற விவரத்தையும் பிசிசிஐ-யின் செயலாளர் ஜே ஷா வெளியிட்டார்.


கிரேட் A+ :இந்திய பண மதிப்பீட்டின் படி 7 கோடி ரூபாய் சம்பளம்
விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜாஸ்பிரிட் பும்ரா.


கிரேட் A :இந்திய பண மதிப்பீட்டின் படி 5 கோடி ரூபாய் சம்பளம்
ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கயே ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவன், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட்.


கிரேட் B :இந்திய பண மதிப்பீட்டின் படி 3 கோடி ரூபாய் சம்பளம்
ரித்துமான் சஹா, உமேஷ் யாதவ், யுவேந்திர சஹல், ஹர்திக் பாண்டியா மற்றும் மயங்க் அகர்வால்.


கிரேட் C :இந்திய பண மதிப்பீட்டின் படி 1 கோடி ரூபாய் சம்பளம்
கேதார் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹார், மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.
இதில் 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய புது முகங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறாதது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தோனியின் முடிவா?
2004ஆம் ஆண்டு துவங்கிய கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக தோனி செய்த சாதனைகள் பெரும்பாலும் இன்றளவும் முறியடிக்க முடியாதவைகளாகவே இருக்கிறது.
சர்வதேச போட்டிகளில் இந்திய அணி கடுமையான காலத்தை எதிர்கொண்டபோது, 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெற்றிவாகை சூடுவதற்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் தோனி.


 அதன் பிறகு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு கடைசி நேரத்தில் கைகொடுத்தார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை வென்று, கேப்டனாக அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்றவர் என்ற பெருமையை பெற்றார் தோனி. ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முன்னரே, 2009ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது தோனியின் தலைமையில் தான்.
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி சுற்றில் இந்திய அணி வெளியேறிய போது, பத்திரிகையாளர்களை சந்தித்த தோனியிடம் ஓய்வு பெறுவதை பற்றி கேள்வி எழுப்பினவருக்கு "ஏன் என் உடலில் தொடர்ந்து விளையாடுவதற்கு வலு இல்லையா" என்று கேட்டார் தோனி. 

இத்தனை சாதனைகளை செய்த தோனி, அவரே ஓய்வு அறிவிக்காதபோது, சம்பளத்தை ஒதுக்காமல் அவரை வெளியேற்றுவதற்கான வேலைகளை மறைமுகமாக பிசிசிஐ முன்னெடுக்கிறதா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றது. அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 2 ஆவது இன்னிங்ஸில் அனைவருமே ஏமாற்றமளிக்க தோனி மற்றும் ஜடேஜா களத்தில் நின்று நம்பிக்கை அளித்தனர். 49ஆவது ஓவரில் ரன் எடுக்க ஓடும்போது, குப்தில் வீசிய த்ரோவில் ரன்-அவுட் ஆனார் தோனி. அன்று பெவிலியன் திரும்பியவர் இன்று வரை எந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் தலை காட்டவில்லை. ஆஸ்திரேலியா தொடரில் தோனி களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனார்.


இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஜனவரி 9ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த போது, தோனியை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு, "ஐபிஎல் தொடர் வரை காத்திருங்கள். ஏனென்றால் அதுதான் அடுத்த தொடரில்(டி20 உலகக் கோப்பை) பங்கேற்கப்போகும் 15 வீரர்களை தேர்வுசெய்ய உதவியாக இருக்கும்", என்றார். மேலும் "தோனி தற்போது ஒருநாள் போட்டிகளை விட டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறார்." என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.


Panerai எனப்படும் வாட்ச் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம், தோனியின் ஸ்டைலான கிரிக்கெட் ஷாட்டை லோகோவாக வைத்து பிரத்யேகமான வாட்சை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தோனி வாழ்க்கையில் நினைத்தாலே இனிக்கும் நினைவுகளாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடர் மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரைக் குறிப்பிட்டார். ஆனால் தன்னுடைய அடுத்த கிரிக்கெட் பயணம் அல்லது ஓய்வு பற்றி பேசவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வியந்து ரசித்த கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுபெற்று வருகிறார்கள். அந்தவகையில் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் தோனியின் பெயர் இல்லாதது, அவரை ஓய்வு பெற வற்புறுத்துகிறார்களா? என்ற சந்தேகத்தை கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.