அமமுக பழனியப்பனுக்கு எடப்பாடியின் அடுத்த வலை!

அமமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனை மையமாக வைத்து மீண்டும் அரசியல் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே அதிமுக பக்கம் போகலாமா, அல்லது திமுக பக்கம் போகலாமா என்று நெருக்கமான கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனைகளில் ஈடுபட்டுவருவதாக தர்மபுரி வட்டாரங்கள் தடதடக்கின்றன.
.அமமுகவின் தூண்களாகவிருந்த செந்தில்பாலாஜியும், தங்க தமிழ்செல்வனும் திமுகவில் இணைந்தார்கள். பெங்களூரு புகழேந்தி அண்மையில் அதிமுகவில் இணைந்துவிட்டார். எசக்கி சுப்பையா போன்ற பலர் நிர்வாகிகளும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள்.
இந்நிலையில் அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நகரச் செயலாளர்கள், அதிமுக திமுக என சேரத் தயாராகிவருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் தினகரன் பெரிதாக எந்த கட்சி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எம்.ஜி.ஆர். பிறந்த தின பொதுக்கூட்ட அறிவிப்பு வெளியிட்டார். மற்றபடி அமைதியாகவே இருக்கிறார்.
இந்நிலையில் தினகரனுக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அதிமுகவுக்குப் போகிறார் என்ற செய்தி இப்போது மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இதுபோன்ற செய்திகள் வருவதும், அதை பழனியப்பன் மறுப்பதும் என்று கடந்த ஆண்டு தொடர்கதையாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி தனக்கு யார் யார் மூலமாக தூதுவிட்டார் என்றெல்லாம் தர்மபுரி அமமுக உள்ளாட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பட்டியலே போட்டு மறுத்தார் பழனியப்பன்.
ஆனால் இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை வைத்து அதிமுக, அமமுக வட்டாரத்தில் பழனியப்பனே பேசுபொருளாகியிருக்கிறார். இரு கட்சியினரிடத்திலும் விசாரித்தோம்.
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு சில நாட்கள் முன்னதாக பழனியப்பன் அண்ணன் வெள்ளியங்கிரியை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். அவருக்கு பொங்கல் பரிசாக பொதுப்பணித்துறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கான்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார். பழனியப்பனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி எதிர்பார்க்கும் பதில் பரிசு. பழனியப்பனைக் கட்சியில் இணைப்பது சம்பந்தமாக வெள்ளியங்கிரியுடன் விலாவாரியாக பேசியுள்ளார் எடப்பாடி. அதேபோல் அமமுக பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமியை அழைத்த முதல்வர் சில கோடிகளுக்கு வேலை கொடுத்து மனசை மாற்றியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் முன்னிட்டு அமமுக நிர்வாகிகள் சிலர் பழனியப்பன் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள், அவர்களிடம் பேசிய பழனியப்பன், ‘முதல்வர் பழனிசாமி நம்மைத் தேடிவந்து பேசுகிறார், அண்ணனை அழைத்து கோடிக்கணக்கில் வேலை கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் திமுகவிலிருந்தும் பேசிவருகிறார்கள்’ என்று பேசியிருக்கிறார்” என்கிறார்கள்.
நாம் விசாரித்தபோது, “திமுக நண்பர்களுடன் நல்ல நட்பாகவிருப்பார், ஆனால் அதிமுகவில் இணையத் தயாராகிவிட்டார். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழனியப்பனுக்குதான் பொருந்தும்போல!” என்கிறார்கள் பழனியப்பன் குடும்ப நண்பர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.