கிளிநொச்சியில் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

சமூக சீர்கேடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி, விநாயகபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த பிரதேசத்தில் இயங்கும் விபச்சார விடுதியை தடை செய்யவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.

தமது பிரதேசத்தில் நீண்ட காலமாக காணப்படும் விபச்சார விடுதியுடனான சமூக சீர்கேடு தொடர்பாக பல தரப்பினரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற போதிலும், குறித்த செயற்பாடானது தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதால் தமது கிராமத்திற்கு அவப்பெயர் காணப்படுவதோடு இதனால் தாம் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் தனிநபர் ஒருவர் பிற பிரதேசங்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து விடுதி ஒன்றை நடத்தி வருவதாகவும். இதனால் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கிடையிலும், வேறு பிரதேசங்களிலிருந்து வரும் நபர்களுக்கிடையிலும் தொடர்ந்து முறுகல் நிலை காணப்படுவதாகவும், இப்பிரதேச இளைஞர்கள் குறித்த செயற்பாட்டை தடுப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சமூக சீர்கேடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கும் மக்கள், குறித்த சமூக சீரழிவிற்கு 15 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் செல்வதை அவதானித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் கவனஞ்செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு கிராமத்தின் நற்பெயரை மீளப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.