நினைத்தாயோ நித்திலா - சிறுகதை!

மாலை ஆறு மணிக்கே கும்மென்ற இருள் வியாபித்துக்கிடந்தது. மழைமேகம் இறங்கத் தயாராய் இருப்பதை கட்டியம் கூறியது அந்த அடர்இருள். ஒரு வித கூதல் காற்று உடலை வருத்தியது. மினுக்மினுக்கென அங்கங்கே தெரிந்த ஒளிக்கீற்றுக்கள் நடுவிலே தெரிந்த இருள் முகம் எல்லாம் சேர்ந்து ஆரத்தை சுற்றிய இரத்தினக் கற்கள் போல காட்சியளித்ததன. யன்னலின் ஓரமாய் சாய்ந்து நின்ற அவளுக்குள் ஆயிரம் சிந்தனைகள்.
தூரத்து வானில் ஒற்றை நட்சத்திரம் ஒன்று மெல்லக் கண் சிமிட்டியது. நீண்ட வானின் சிறு பொறி நட்சத்திரம் போல அவளது வாழ்க்கையின் பிடிப்பு அருமை மைந்தன்,  அனந்திகன் மட்டுமே என்பது வாழ்வின் நிதர்சனம். அவன் ஒரு முத்து போல, அவளுக்கு வாழ்வில் கிடைத்த சொத்து. காலம் தந்த பல காயங்களிலும் இதுவொரு நிறைவு.

மெல்லிய அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். குழந்தை அரண்டு திரும்பிப் படுத்தான். அருகில் சென்றவள் அவன் தலைகோதி நெற்றியில் தன் இதழ் பதித்தாள். அவள் வாழ்க்கையில் தான் எத்தனை தோல்விகள், ஏமாற்றங்கள்....

 நிமிர்ந்து பார்த்தாள். மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது. அவள் எண்ணங்களும் சேர்ந்து சுற்றியது. பிறந்ததும் தாயை இழந்தவள், பருவத்தில் தந்தையை இழந்தவள். பெரியம்மா வீட்டோடு வாழ்க்கை அவளுக்கு. ஓயாது வேலை, பம்பரமாய் சுற்றுவாள். இதற்கிடையில் தான், படிப்பு. பெரியம்மாவின் அதட்டலுக்கு அவள் எப்போதும் பயந்தவள். அவள் பயந்தவள் என்பதற்காய் தள்ளிவிடவில்லை சில இயற்கையின் நியதிகள்.

ஆம், அதில் காதலும் சேர்த்தி. கல்லூரி காலத்தில் அவள் ஒரு பட்டாம்பூச்சி போலவே இருப்பாள். எப்போதும் ஒரு துறுதுறுப்பு. எதிலும் ஒரு நேர்த்தி. இரண்டே ஆடையை அவள் சுத்தமாய் அணிந்துவரும் அழகோ அழகு. நிலவிற்கு பொட்டு வைத்ததுபோல அழகான மங்கை அவள். அவளது எளிமையே அவளது அழகென்பர் பலர். அவளது துடினமே அழகென்பர் சிலர். முத்துப்பல் தெரிய அவள் சிரிக்கும்போது கன்னக்கதுப்பில் விழுகின்ற குழியே அவளது அழகின் ரகசியம் என்பர். இதையெல்லாம் கடந்து வேலை வார்த்து வைத்தது போன்ற  அவள் நயனங்களே மாபெரும் அழகென்பர் வேறு சிலர். எது எப்படியெனினும் சௌந்தர்ய தேவதை ஏழைக்கோலம் கொண்டது போல இருக்கும் அவளை,  சுற்றிவராத ஆண்கள் மிகக்குறைவு. அந்தச் சிலரில் ஒருவனாய் இருந்து அவள் மனதை நிறைத்தவன் அகவேந்தன். எப்போதாவது எதிரெதிரே வரும் போது இருவரும் பார்த்துக்கொள்வார்கள். அப்படியே விலகிவிடுவார்கள்.

அவள் படிப்பில் படுகெட்டிக்காரி. உயர்தரம் முடித்து பல்கலைக்கழகம் கிடைத்திருந்தது. பல்கலைக்கழக படிப்பு அவளுக்கு எட்டாது போய்விட்டது, கலியாண அவசரத்தில்.  அதற்கிடையில் தான் விதி அவளது வாழ்க்கையைத் திருப்பிப்போட்டது. பெரியப்பாவின் அக்கா மகன் நந்தனனுக்கு அவளைத் திருமணம் செய்வதற்கான பேச்சுக்கள் நடந்தபோது இவளால் ஒன்றும் சொல்லமுடியாதுபோயிற்று. விடயம் அறிந்து அகவேந்தன் , 'என் மீது விருப்பம்தானே?' எனக் கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை என்றுகூறிவிட்டாள்.

அன்று, அவன் முகத்தில் கொட்டிய துயரத்தை அவளால் இப்போதும் எண்ணிப் பார்க்கமுடியவில்லை. அந்தக் கண்ணுக்குள் தான் எத்தனை வலி. பார்த்துப் பார்த்து தான் சுமந்த ஒன்றை பறிகொடுப்பது போன்ற வலியில் அவன் துடித்ததை அவள் அறியவே செய்தாள். ஆனாலும் வீட்டினர் மீதான பயமும் தான் பட்டுவிட்ட நன்றிக்கடனும் அவளைப் பேசாமடந்தை ஆக்கியது. மௌனமாகவே வந்துவிட்டாள்.

நந்தனனை புகைப்படத்தை காட்டியபோது  அவளுக்குப் பார்க்கப்பிடிக்கவில்லை, அவள் பார்க்கவும் இல்லை, . எனினும்,  தான் சொன்னதை அவள் தட்டமாட்டாள் என்ற பெரியம்மாவின் எண்ணத்தை உடைக்க அவள் விரும்பாததினால் கல்யாணமும் நடந்தேறியது. திருமணத்திற்கு முதல் நாளில் தான் அவனைக் கண்டாள். பருத்த தேகமும் சிரிப்பற்ற முகமுமாய் அவனைக் கண்டதுமே அவளுக்குப் துளிகூட பிடிக்கவில்லை. என்ன செய்ய, யாரிடம் சொல்ல, அறைக்குள் நுழைந்து தலையணை ஈரமாகும் வரை அழுது முடித்தாள். விதி இப்படி கோரமாகவா அவளது வாழ்வில் விளையாடித் தீர்க்கவேண்டும்? இத்தனையும் நடந்துமுடிந்த வாழ்வில் எதுவும் நடக்கட்டும் என மௌனமாக இருந்துவிட்டாள்.

முதலிரவில், “இல்லறம் பற்றி எந்தக் கனவும் கொள்ளாதே” என அவன் எச்சரித்த விதத்தில் ஆரம்பத்தில் குழப்பமாகவும் பின்னர் ஆறுதலாகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தாள். எதை நினைத்துப் பயந்தாளோ அது இத்தனை இலகுவாய் முடியும் என்பதை அவள் எண்ணவே இல்லை. உள்ளம் துள்ளியது. அவளது எண்ணத்தில் நிறைந்தவனை தூக்கிப்போடவேண்டிய அவசியம் இல்லை. உள்ளத்தில் அவனை ஆராதிப்பதில் எந்தவொரு தடங்கலும் கிடையாது. அவளுக்குள் நிறைந்தவன் நிறைந்தே இருக்கட்டும் என எண்ணிக்கொண்டாள் அந்தப் பேதை.

வாழ்க்கை ஒருவாறு ஓடியது. இடைப்பட்ட காலத்தில் அவனது பெற்றவர்களோடுதான் அவளது வாழ்க்கை வண்டி ஓடியது.  எங்கும் வெளியில் செல்ல அனுமதி இல்லை, அவள் போகவிரும்பியதும் இல்லை. அகவேந்தனைக் காணநேருமோ என்ற பயமே காரணமாய் இருந்தது. இரண்டு ஆண்டுகளில் அவன் மூலமாகவே லண்டன் வந்து சேர்ந்தாள். தனது குறையை மறைத்து திருமணம் செய்தவன் என்ற கோபமும் வெறுப்பும் அவளிடம் இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால்,  கணவன் வாழ்வின் கடைசி விளிம்பில் நிற்பவன் என்ற உண்மை தெரிந்தபோது எல்லாமே நொறுங்கிப் போயிற்று. அவன் தன்போக்கில் அவள் தன்போக்கில் என்றானது வாழ்க்கை. தனது குறை வெளியாருக்கு தெரிந்துவிடக்கூடாது என எண்ணிய அவளது கணவனின் திட்டத்தின்படி அவளே கருவைச் சுமக்கவேண்டும் என அவன் கேட்டதை அவளால் நிராகரிக்கமுடியவில்லை. மரணத் தறுவாயில் அவன்கேட்டபோது அவளும் மௌனமாகச் சம்மதித்துவிட்டாள்.

மகப்பேற்று மருத்துவர் ஒருவரை கலந்தாலோசித்து, வேறொரு கருமுட்டையை அவள் வயிற்றில் ஊசிமூலம் ஏற்றி பத்து மாதங்கள் அவள் பார்த்துப் பார்த்து சுமந்து பெற்ற மகனே அனந்திகன். யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதபடி வைத்தியருக்கும் அவர்கள் இருவருக்கும் மட்டுமாகவே தெரிந்ததாய் நடந்துமுடிந்தது இவ்விடயம். அந்த வைத்தியரிடம், கரு கொடுத்தவனைப் பார்த்து நன்றி சொல்லவேண்டும் என நந்தனன் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அதன்பின் கேட்கவில்லை. மகன் பிறந்து ஓராண்டுகள் முடிய முன்னரே நந்தனனின் வாழ்க்கை முடிந்துபோயிற்று.

மனசுக்குள் இருந்தவன் இல்லையென்று ஆனபின் உறவென்று வந்தவன், துணையாக இருந்தவன் போனதால் நித்திலாவிற்கு மனம் வெறுமையாய் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனாலும் இதுதான் வாழ்க்கை என்பதைப்புரிந்து வாழத்தொடங்கினாள். இதோ ஐந்து வருடங்கள் ஓடிப்போயிற்று. அனந்திகன் மட்டுமே அவள் உலகம் என்றாயிற்று. ஏனோ மகனின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவளுக்கு அகவேந்தனையே நினைவுபடுத்தியது. அவனது சிரிப்பு, உதட்டுச்சுழிப்பு, கண்ணைச்சரித்து சாய்ந்து நின்று பேசும் தோரணை அனைத்தும் அகவேந்தனைப்போலவே என எண்ணினாள். மனதில் அவன் இருந்ததால் அப்படித்தோன்றுகிறதோ எனவும் அவள் எண்ணுவதுண்டு. ஒருவேளை நந்தனன் நல்ல கணவனாக இருந்திருந்தால் அகவேந்தன் அவளது மனதில் ஆழத்திற்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவளது வாழ்க்கைதான்? சட்டென்று மின்விசிறி நின்றதும் உடம்பு வியர்க்க அவள் நினைவுகளும் நின்றுபோனது.

மறுநாள் மாலை, மகனையும் அழைத்துக்கொண்டு, பூங்காவிற்குச் சென்றவள், மகனை ராட்டினத்தில் ஏற்றிவிட்டு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த விபத்து நடந்தது. சற்றே உயரச்செல்ல தவறுதலாய் வழுக்கிக்கொண்டு விழுந்தான் அவளது அருமை மைந்தன். வீரிட்டு கத்தியபடி அவள் விரைந்தோடவும் மக்கள் கூடவும் சரியாக இருந்தது. கூடி நின்றவர்களை விலத்தி சட்டென்று  வந்து, மளமளவென மகனைத்தூக்கி,  வைத்தியம் பார்த்தவனை   அவள் கவனிக்கவில்லை. அவனும் தன்போக்கில் தனது பணியைச் செய்துகொண்டிருந்தான்.

அப்போது பார்த்து,  அவ்விடம் வந்த வைத்தியர்,  வியப்பாய் பார்த்தார்.

 அருகருகே நின்றவர்களைக் கண்ட வைத்தியரின் புருவம் ஆச்சரியமாய் விரிந்தது. “உங்களுக்கு உண்மை தெரியுமா நித்திலா?” என்றார்.
“என்ன உண்மை?” அவசரமாய் கேட்டவள், அப்போதுதான் பார்த்தாள் அருகில் நின்றவன் அகவேந்தன்.
“அதுதான்மா உன் கணவனோட ஆசைக்காக நீ சுமந்த கர்ப்பத்திற்கான கருவை தந்தது இவர்தானே “ என்றார்.
விக்கித்துப் போனாள் நித்திலா.
சட்டென்று அவள் தலைகவிழ்ந்தபோது,  "உனக்கென்று தெரியாது நித்திலா......." கண்ணீருடன் சொன்னான் அகவேந்தன்.

காலம் விரைந்தது, இப்போது அவள் நித்திலா அகவேந்தன். காலம் பிரித்தவர்களை காலமே இணைத்துவைத்தது

கோபிகை
தமிழருள் இணையத்தளம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.