பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு: கோரிக்கையை ஏற்குமா அரசு?

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.



தஞ்சைப் பெரிய கோவிலுக்கு 1996ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் பிப்ரவரி 5ஆம் நாள் பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை ஆகியவை செய்து வருகின்றன. இதனிடையே, ‘தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்’ என்று தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ‘தமிழில் குடமுழுக்கு’ எனும் கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23ஆம் தேதி தஞ்சையில் மாநாடு நடத்துவது என்றும் அந்தக் குழு அறிவித்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வரலாறு நெடுகிலும் தஞ்சைப் பெரிய கோவிலில் தமிழர் பண்பாட்டின் வழிபாட்டு முறைகள் சிதைக்கப்பட்டு, பிற பண்பாடுகளின் ஆதிக்கம் நுழைந்திருப்பதை உணர முடியும். அதை மாற்றி, தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு, தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தொல்தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்டிடும் முயற்சிக்கான போராட்டங்கள் காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. அந்த வகையில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் திருக் குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்த வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்த மாநாட்டின் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் முறைப்படி குடமுழுக்கு எனும் கோரிக்கையைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் சைவ நெறி, வைணவ நெறி மற்றும் குலதெய்வ கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தஞ்சைப் பெருவுடையார் கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி; தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216. சிவலிங்கத்தின் உயரம் 12 அடி; தமிழ் உயிர் எழுத்துக்கள் 12. சிவலிங்கப் பீடம் 18 அடி; தமிழ் மெய் எழுத்துக்கள் 18.சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி;தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 என்று சுட்டிக்காட்டியுள்ள வைகோ,

“இவ்வாறு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்குப் பெருவிழாவைத் தமிழ் முறைப்படி நடத்துவதுதான் சாலப் பொருத்தம் ஆகும். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுதொடர்பாக பதிலளித்த செய்தி மற்றும் விளம்பர தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “தஞ்சை பெரிய கோவிலுக்கு திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழில் குடமுழுக்கு செய்யாமல் தற்போது குறை கூறுகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கிற்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், தமிழில் குடமுழுக்கு என்னும் கோரிக்கையை அரசு ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.