மசூதியில் இந்து திருமணம்: குவியும் பாராட்டு!

கேரளாவில் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து இந்துமதத்தைச் சேர்ந்த ஜோடிக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக மசூதியில் திருமணம் நடத்தி வைத்ததற்குப் பல தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


கேரள மாநிலம் ஆலப்புழா சேரவாலி பகுதியைச் சேர்ந்தவர் பிந்து. இவரது கணவர் அசோகன் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற மகள் உள்ளார். கணவர் இறப்புக்குப் பிறகு மிகவும் வறுமையில் தனது வாழ்க்கையை நடத்தி வந்த பிந்து தனது மகளுக்கு சரத் என்பவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் திருமணத்துக்கு போதிய பணம் இல்லாத நிலையில் சேரவாலி ஜமாத் கமிட்டியின் உதவியை நாடினார். தனது குடும்பச் சூழலை ஜமாத் கமிட்டியிடம் எடுத்துக் கூறி உதவி கேட்டுள்ளார். இதுதொடர்பாக கடிதமும் எழுதியுள்ளார்.

பிந்துவின் குடும்பச் சூழலை உணர்ந்த ஜமாத்தின் செயலாளர் நிஜுமுதீன் அலுமூட்டில், அஞ்சு திருமணத்துக்கு உதவுவது குறித்து கமிட்டியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து மதம் கடந்து உதவ முன் வந்த ஜமாத் கமிட்டி அஞ்சுவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது.

அதன்படி இன்று ஜமாத்தில் அஞ்சுவிற்கும், கயம்குளம் பகுதியைச் சேர்ந்த சசிதரனின் மகன் சரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக ஜமாத் சார்பில் 1000பேருக்குச் சாப்பாடு,அஞ்சுவுக்கு 10 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் இதர பொருட்களும் வழங்கி சிறப்பாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

சேரவாலி மசூதியில் அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓத, திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்து மழையில் திருமணம் வெகு சிறப்பாக நடந்துள்ளது.

இதுகுறித்து நஜுமுதீன் கூறுகையில், “பிந்துவின் மகளுக்கு நாங்கள் திருமணம் செய்துவைப்பதை, நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகளுடன் இணைத்துப் பேசுகின்றனர். பிந்து கணவர் இறந்த போது அவருக்கு இறுதிச் சடங்கு கூட செய்ய முடியாமல் அவரது குடும்பத்தினர் சிரமப்பட்டனர். அப்போதும் நாங்கள் உதவி செய்தோம். பிந்துவின் கணவர் இறந்தது முதல் அவர்களை எங்களுக்குத் தெரியும். பிந்து, தனது மகளின் திருமணத்தை நடத்தி வைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று திருமணம் நடத்தி வைக்க முன்வந்தோம். பிந்துவின் இளைய மகனுக்கான படிப்பு செலவை நான் முழுமையாக ஏற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடந்த இந்த திருமணத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், இத்திருமண புகைப்படத்தைப் பதிவிட்டதோடு, கேரள மக்களின் ஒற்றுமைக்கான உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.