டூலெட்: இந்திய அணியின் நான்காவது இடம்!

கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் சரியாக அமையாவிட்டால், வெற்றி இலக்கு குறைவாகவே இருந்தாலும், அதை அடைவதில் மிகவும் சிரமம் ஏற்படும். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி, பேட்டிங் ஆர்டர் காரணமாக மிக முக்கியமான பல போட்டிகளில் தோற்றுள்ளது. இதில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளும் அடங்கும்.


2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மிகவும் வலுவான நிலையில் இருந்தது. தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்ற லீக் சுற்றில், மிடில் ஆர்டர் பேட்டிங் சரியாக அமையாததால், இந்திய அணி எளிதாகத் தோற்றுப்போனது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக், சச்சின் மற்றும் கம்பீர் மூவரும் இணைந்து 253 ரன்களைச் சேர்க்க, அடுத்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் இணைந்து வெறும் 43 ரன்களே எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நம்பர் 4 பேட்ஸ்மேன் தான் மிடில் ஆர்டர் - ஓப்பனிங் - பேட்ஸ்மேன். கேட்பதற்குச் சாதாரணமாக இருந்தாலும் மிடில் ஆர்டர் சரியாக அமைவதற்கு, நான்காவதாகக் களமிறங்கும் பேட்ஸ்மேன் சரியாக அமைந்தால் மட்டுமே அணி எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். அந்த வகையில் இதுவரை இந்திய அணியில் சிறந்து விளங்கிய ‘நம்பர் 4’ பேட்ஸ்மேன்களைப் பற்றிப் பார்ப்போம்.

திலிப் வெங்சர்கார்

1980ஆம் ஆண்டுகளில் சுனில் கவாஸ்கர் டாப் ஆர்டர் பேட்டிங்கிலும், கபில் தேவ் லோ ஆர்டர் பேட்டிங்கில் சிறந்து விளங்கிய சமயத்தில், திலிப் வெங்சர்கார் மிடில் ஆர்டர் பேட்டிங் தடுமாறாமல் இருக்க பெரிதும் உதவினார். தன்னுடைய 15 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 71 ஒருநாள் போட்டிகளில், ‘நம்பர் 4’ பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளார். இந்த பேட்டிங் ஆர்டரில் இதுவரை 2,138 ரன்களை எடுத்துள்ள திலிப்பின் சராசரி 37.51. ஆனால் அவருடைய ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளின் சராசரி 34.73. நம்பர் 4 பேட்ஸ்மேனாக அதிக காலத்திற்கு இருந்த திலிப் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறும்போதெல்லாம் சிறப்பாக பொறுப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

முகமது அசாருதீன்

1990ஆம் ஆண்டுகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் முகமது அசாருதீன். நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கும் இவர், இதுவரை 137 போட்டிகளில் 4,605 ரன்களை அடித்துள்ளார். நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கி 40க்கு சராசரி வைத்திருக்கும் அசாருதீன், அந்த காலகட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் டிராவிட்

டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளைச் சந்தித்த வீரர் என்று அனைவராலும் பேசப்பட்டாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நிலையான பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்தான். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்களை எடுத்துள்ள டிராவிட், மிடில் ஆர்டரில் விளையாடி பல முறை இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டுள்ளார். 102 போட்டிகளில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக விளையாடியுள்ள ராகுல் டிராவிட், இதுவரை 3,301 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர்

சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர தொடக்க ஆட்டக்காரர் என்று முடிவு செய்யப்பட்ட சச்சின் டெண்டுல்கர், நம்பர் 4 இடத்திலும் சிறந்து விளங்கியது கவனிக்கத்தக்கது. ஆரம்பக் காலத்தில் சச்சின் இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய போது, லோ ஆர்டரில் விளையாடி வந்தார். அதன் பிறகு படிப்படியாக டாப் பேட்டிங் ஆர்டரில் விளையாடத் தொடங்கிய சச்சின், இதுவரை 61 போட்டிகளில் நம்பர் 4 இடத்தில் விளையாடியுள்ளார். 2,059 ரன்களுடன் 38 சராசரியை வைத்துள்ள சச்சின், இந்திய அணிக்காக விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர்.

யுவராஜ் சிங்

சர்வதேச போட்டிகளில் 2000ஆம் ஆண்டு களமிறங்கிய யுவராஜ் சிங், இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர். 108 போட்டிகளில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக விளையாடியுள்ள யுவராஜ் சிங், இதுவரை 3,415 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட யுவராஜ் சிங், மிடில் ஆர்டரில் இந்திய அணி தடுமாறாமல் இருக்க பல முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த யுவராஜ் சிங், 2012ஆம் ஆண்டு சிகிச்சை பெற்று மீண்டும் களமிறங்கினார். ஆனால் முன்பைப்போல் அவரால் விளையாட முடியவில்லை. அதன்பிறகு 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கி 150 ரன்களை எடுத்தது கவனிக்கத்தக்கது.

தற்போதைய நம்பர் 4 பேட்ஸ்மேன் யார்?

யுவராஜ் சிங் போன பிறகு நம்பர் 4 இடத்துக்கான நிலையான பேட்ஸ்மேன் இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் நம்பர் 4 இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட், இக்கட்டானா சூழ்நிலைகளில் ஆட்டத்தைக் கோட்டைவிட்டார்.

ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் நம்பர் 6 பேட்ஸ்மேனாக அதிரடி காட்டுவதற்கு இருந்தாலும், அணியுடைய ஸ்கோர் உயர்வதற்கு மிடில் ஆர்டரில் களமிறங்கும் நம்பர் 4 பேட்ஸ்மேன் மிகவும் முக்கியமானவர். தற்போது ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்திய அணிக்காக விளையாடவில்லை என்பதால், அந்த இடத்தையும் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாம் ஒருநாள் போட்டியில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக விராட் கோலி களமிறங்கியது, கிரிக்கெட் ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டது. இரண்டாம் போட்டியில் நான்காவது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் ஒற்றை ரன்களில் வெளியேறினார். முதல் போட்டியில் தவறவிட்டாலும், இரண்டாம் போட்டியில் கே.எல்.ராகுலை ஐந்தாவது இடத்தில களமிறக்கி, பேட்டிங் ஆர்டரை சரியாக கட்டமைத்தார் கோலி. இரண்டாம் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடியிருந்தாலும், நம்பர் 4 இடத்தை நிரப்பும் அளவுக்கு மன உறுதி கொண்ட பேட்ஸ்மேன் இன்னும் இந்திய அணிக்குக் கிடைக்கவில்லை.

- திவாகர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.