அம்மா, இது உனக்கே தகுமா - சிறுகதை!!

என் பெயர் வனிதா. இன்று எங்கள் ஊரில் திருவிழா. முத்தாலம்மன் கோவில் திருவிழா. முத்தாலம்மாள் நீதிக்காக தன் க்களைக் ப்பதற்காக தன் அண்ணனையே மண்ணுக்கடியில் சிறைவைத்தவள். வெகுகாலத்திற்குப் பின்னால் இன்றுதான் சொந்த ஊருக்குப் போகிறேன். எனது எண்ணங்கள் பால்யகால நினைவுகளில் பின்னே சென்று கொண்டிருந்தது.


நானும் விஜியும் உயிர்த் தோழிகள். எந்தத் திண்பண்டமாயினும் அது இருவருக்கும் பாதிப்பாதி. நிலமே வறண்டு வானத்திடம் மண்டியிட்டு நாவினை நனைக்க ஒரு சொட்டாவது கொடேன் என கெஞ்சிய வருடங்கள். வெந்த அரிசியின் வெண்மை நிறம் போய் பழுப்பு நிறமே சோறு என்றாகி விட்ட காலம் கிணறுகள் தூர்ந்து போய் பல வருடங்கள் ஆகிப் போனதில், விவசாயிகள் வேறுவேறு கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கையை ஓட்டிய காலம்.

ஊருக்குள் ஒரே ஒரு உப்புத்தண்ணீர் குழாய். பேருக்குத்தான் உப்புத்தண்ணி எல்லோருக்கும் அதுதான் அமிர்தம். அதுவும் இல்லாமலிருந்தால் மக்கள் மடிந்து போயிருப்பார்கள். அத்தண்ணீரில் எல்லா வகையான ஜீவசத்துக்களும் உண்டு. ஏனெனில் புழுக்களும் தண்ணீர் பூச்சிகளுடனும்தான் எங்கள் குடங்கள் நிறையும். உப்புத் தண்ணீருக்கே இந்தப்பாடு என்றால், நல்ல தண்ணீர்? அது முடவனுக்கு எட்டாத மலைத்தேன்.

முத்தாலம்மன் கோவில் அடிகுழாயில் நல்ல தண்ணீர் கிடைக்கும். எங்களைப் போன்ற சுற்று வட்டாரத்தில் ஆறு ஏழு ஊர்களுக்கும் அதுவே கதி. அடிகுழாயுள் நீர் ஊறினால்தான் அடித்து எடுக்க முடியும். ஒரு குடம் நீர் நிறைந்ததன் பின்னே குறைந்தது ஒரு மணி நேரம் கழித்துத்தான் இன்னொரு குடம் தண்ணீர் கிடைக்கும். அதற்கான கூட்டமோ இன்றைய பொழுதில் ஒரு மாநாடே நடத்தி விடலாம்.

அப்படித்தான் அன்று நானும், என் உயிர்த்தோழி விஜியும் மாபெரும் கூட்டத்தைத் தவிர்க்க வீட்டில் சொல்லிவிட்டு நான்கைந்து தோழிகள் சூழ பொழுது சாய்கின்ற நேரத்தில் எங்களால் தூக்க முடிந்த குடங்களோடு சென்றோம். இரவு எத்தனை மணி வரை நாங்கள் அடித்துக் கொண்டிருந்தோமோ தெரியவில்லை. ஒவ்வொருவராய் அடித்து முடித்து நீர் நிரம்பிய குடங்களோடு மற்றவர்களின் குடம் நிறையும் வரைக் காத்திருந்தோம்.

எங்களின் வரிசை எவ்வாறு கணக்கிட்டுக் கொள்வோம் என்றால், குழாயின் அருகே வரும் போது யார் முதலில் ஓடி வந்து குழாயைத் தொடுகிறார்களோ அவர்கள் முதலில் அடித்துக் கொள்ளலாம். இறுதியாய்த் தொட்டவர்கள் இறுதியாய்த்தான் அடிக்க முடியும். அன்று துரதிஷ்டவசமாக விஜிதான் குழாயை இறுதியாகத் தொட்டாள். அதனால் அன்று அவள்தான் இறுதியாய் அடிக்க வேண்டும்.

எங்களது குடம் நிரம்பி விட்டது. அடுத்து விஜியின் குடம் நிறைய இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற நிலையில் தோழிகள் நிரம்பிய குடங்களோடு தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். அந்நேரம் விஜியின் பெரியப்பாவின் மகன் காசி இரண்டு குடங்களோடு வரவும் அவளது குடத்தை குழாயில் வைக்கவும் சரியாக இருந்தது. அவள் குடம் நிறைய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். ஏற்கனவே தோழிகள் உட்கார்ந்து கொண்டே தூங்க ஆரம்பித்திருந்தனர்.

இந்நிகழ்வினை இன்று நினைத்தாலும் என் மனம் குற்ற உணர்வில் மூழ்கி விடுகிறது. நான் அன்று மட்டும் என் உயிர்த்தோழியைத் தனிமையில் விடாமலிருந்திருந்தால்,இன்று நான் நிம்மதியாக இருந்திருப்பேன். நினைத்துக் கொண்டிருக்கையிலேயே என் கண்கள் கனத்து அழுகை வெடித்தது. யாரும் பார்க்காமல் இருக்கவும் என் கண்ணீரின் தடத்தை நானே அழித்துக் கொண்டேன்.

ஆனால், விஜியின் மனதில் விழுந்துவிட்ட தடத்தை என்ன செய்வது? கண்களில் பெருக்கெடுத்து ஓடும் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. என் நினைவில் மீண்டும் விஜி. அந்தச்சம்பவம் நடந்து அன்றோடு பத்துநாட்கள் ஆகிவிட்டது. விஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. எங்களோடு விளையாடவில்லை. பேசவும் இல்லை. உண்ணவும் இல்லை. உறங்கவும் இல்லை. வரும் வழியில் முனி அடித்துவிட்டது என்று பெரியோர்கள் ஒவ்வொருவரிடமும் காட்டி விபூதி அடித்தனர். பேய் ஓட்டிப் பார்த்தனர். காய்ச்சல் கூடிக்கொண்டு சென்றதே அல்லாமல் குறையவில்லை.

வேறு வழியில்லாமல் தூரத்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவர்களும் மருந்து மாத்திரைகள் என்று பெரிய பொட்டலங்களைக் கொடுத்து அனுப்பினர். என்ன செய்தும் அவள் எழுந்து நடப்பதைப் போல் தெரியவில்லை. என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளோடு நானும் கூடவே இருந்தேன். இரண்டு மூன்று நாட்களின் பின்னே மெதுவாக என்னை அழைத்தாள். “என்னடி எதுவும் வேணுமா?” என்றதும், “வேணாம் பக்கத்துல உட்கார்” என்பதாய் கை காட்டினாள்.

திடீரென அவள் விம்மிவிம்மி அழ ஆரம்பித்தாள். எனக்குப் பயமாகி விட்டது. வீட்டிலும் யாரும் இல்லை. வெகுநாட்களுக்குப் பிறகு, இப்பொழுதுதான் அவரவர் வேலைக்குப்போயிருக்கிறார்கள். கோடைவிடுமுறை என்பதால் என்னை மட்டும் துணைக்கு வைத்து விட்டுச் சென்று விட்டனர். மனம் படபடத்தது. என்ன செய்வது? “என் அம்மாவ கூட்டிட்டு வரவாடி பொறு” என்று நான் கதவை நோக்கிச் செல்லவும் கையைப் பிடித்து உட்கார வைத்தாள். பின் அழுது வீங்கிய முகத்தோடு “உங்கிட்ட ஒண்ணு சொல்வேன் யாருகிட்டயும் சொல்லக் கூடாது” என்று கையை நீட்டிச் சத்தியம் பண்ணச் சொன்னாள்.

நான் சத்தியம் செய்ததும், அவள் மனதில் இருந்ததை ஓரளவு ஆசுவாசத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.

“நம்ம தண்ணி எடுக்கப் போணம்ல. அன்னக்கி நீங்க என்ன விட்டுட்டு போனதும் எனக்கு தூக்கம் வந்திடுச்சு. அண்ணன் இன்னும் தண்ணி அடிச்சு முடிக்கலயின்னு ஒக்காந்திருந்தேன். அன்னைக்குன்னு நீங்க போனப்பறம் யாரும் தண்ணிக்கு வரல. நல்லா இருட்டிருச்சு. யார் மூஞ்சியும் தெரியல. அந்த அளவுக்கு இருட்டு” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கவும் என்ன ஆச்சு?ஏது ஆச்சு? என்று கேட்கவும் மறந்து அவள் வாய் அசைவதையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பக்கத்தில் இருந்து சொம்புத் தண்ணீரை எடுத்து ஒரு வாய் குடித்துவிட்டு, மீண்டும் மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தாள். “அப்பறம் அண்ணன் சொல்லுச்சு எவ்வளவு நேரம் ஒரே இடத்துல ஒக்காருறது வா பொட்டலுல போய் ஒக்காருவோம்னுசொல்லுச்சு. சரின்னு நானும் போனேன். எனக்குக் கொஞ்ச நேரத்துலயே தூக்கம் வந்திடுச்சு. தண்ணி அடிச்சுட்டு என்ன உசுப்புண்ணேன்னு சொல்லிட்டு தூங்கிட்டேன். நம்ம கூட அண்ணன் இருக்குலங்கிற நெனப்புல தூங்கிட்டேன். ஆனா…” என்று சொல்ல ஆரம்பித்தவள் திடீரெனத் திரும்பவும் சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.

அவளை நான் கட்டி அணைத்துக் கொண்டேன். அழுது முடித்து மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேன். யாரோ என்ன தொடுற மாதிரி தோணவும் கண்ண முழிச்சா. என் சட்டபாவடைய எல்லாம் காணோம். நான் அம்மணமாப் படுத்திருந்தேன். திரும்பிப் பாத்தா அண்ணன் எம் மேல படுக்க வருது. நான் கத்தவும் என் வாய என் சட்டய வச்சே அடச்சுருச்சு. எம் மேல படுத்து பொரண்டு ஒடம்புல ஒரு இடம் விடாம ம்கடிச்சு வச்சுருச்சு. எனக்குக் கத்த முடியாததால மூச்சுமுட்டி மயக்கம் வந்திடுச்சு. அப்பறம் கொஞ்சநேரம் கழிச்சு கண்ண முழிச்சா அங்க யாருமே இல்ல. நல்ல இருட்டுங்கிறதால எனக்கு ஒன்னுமே புரியல” என்று அவள் சொல்லும் போதே எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது.

“அதுக்கப்பறம் என்னால எந்திருச்சு நடக்க முடியல. நான் சட்டய போட்டுக்கிட்டு கொடத்தத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்டி. ஆனா அப்ப இருந்து ஒண்ணுக்குப் போனா அந்த இடம் எரியுது. அதோட வலிக்கவும் செய்யுதுடி”ன்னு சொன்னவள். தயங்கித் தயங்கி மற்றுமொரு விசயத்தையும் சொன்னாள்“ மறுநாள் ஒண்ணுக்குப் போனப்ப ரத்தமும் வந்திச்சு. எனக்குப் பயமா இருக்குடி”அவள் சொன்னதும்“அப்ப உங்க அம்மாகிட்ட சொல்லுவோம்டி அவங்க சரி பண்ணிடுவாங்க”ன்னதும் வேணாம் என்று தடுத்து விட்டாள்.

அன்றிலிருந்து இது எங்கள் இருவருக்குமான ரகசியம்ஆனது.

பின்னர் மனபாரத்தை என்னிடம் இறக்கி வைத்ததாலோ என்னவோ கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினாள். ஆண்கள் அருகில் வந்தாலேப் பயப்பட ஆரம்பித்தாள். ஒருவித பயம் எப்பொழுதும் அவள் கண்களில் தொற்றிக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து முடிந்தவரைஅவளை நான் தனியே விடுவதில்லை. இன்றோ அவளுக்கும் திருமணம் ஆகி விட்டது. இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்த முத்தாலம்மன் கோவில் திருவிழாவிற்கு அவளும் வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே என் தோளில் ஒரு கை விழுந்து உலுக்கியது.

“வனிதா ஊர் வந்திடுச்சு இறங்கு” என என் கணவர்தான் அழைத்தார்.

“வீட்டிலிருந்து கௌம்புனதில இருந்து ஏன் இவ்வளவு அமைதியா இருக்க” என்று அவர் வினவவும் தான் நிகழ்காலம் மறந்து போனது நினைவு வந்தது. இருந்தாலும் விஜியின் கொழுக்மொழுக்கென்ற உருவம் மறைந்து எலும்புந்தோலுமாய் ஆகிப் போனதும்,சுறுசுறுப்பாய் சுற்றித் திரிந்தவள் வீடே கதியென்று மாறிப்போனதும் வாயாடி என்று பேரெடுத்தவள் அமைதியாய் மாறிப்போனதும் அந்தச் சம்பவத்தால்தானே. அதற்கு சாட்சியாயிற்றே நான் என்று மனம் அவ்வப்போது பேதலிக்கிறது.

சம்பவம்நடந்த இடம் வேறாக இருந்திருந்தால் கூட மன ஆதங்கம் குறைந்திருக்கும். மக்களின் உயிரைப் பலி கேட்கிறான் அண்ணன் என்பதற்காக மண்ணுக்கடியில் போட்டு பூட்டி வைத்தவள் முத்தாலம்மா. அவள் முன்னே இப்படி அக்கிரமமா? அண்ணன் என்று நம்பித்தானே விஜியை விட்டுச் சென்றோம். நீதிதேவதை என நம்பிய முத்தாலம்மாவாவது அவளைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? என்னுள் எழும் இந்தக் கேள்விகளுக்குத்தான் இருபது வருடங்களாக விடை கிடைத்தபாடில்லை.

அம்மா வீட்டுக்கு வந்தாயிற்று. வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்தது. விஜியை உடனேப் பார்க்க வேண்டும் என மனம்அடித்துக் கொண்டது. பக்கத்துவீடுதான் அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். நான் கடைசியாய்ப் பார்த்ததை விட மெலிந்திருந்தாள். பார்த்ததும் கட்டிக் கொண்டு அழுதும் விட்டேன். ஏதேதோ பேசிக்கொண்டோம். அம்மனுக்கு மாவிளக்கு எடுப்பவர்கள் வரவும் என ஒலிப்பெருக்கியில் அழைப்பு வந்தது. நானும் விஜியும் வரிசையில் ஒன்றாகக் கிளம்பிப் பிரகாரத்தை மூன்று சுற்று சுற்றிவந்து மாவைப் பூசாரியிடம் கொடுக்கும் போதுதான் கவனித்தேன். அது...அது... அதுதான்... அவனேதான் என் விஜியின் மகிழ்ச்சியை ஒரு நாளில் இல்லாமலாக்கியவன்... அவனா பூசாரி?

அம்மா இது உனக்கே தகுமா? சகோதர உறவையேக் கொச்சைப் படுத்தியவனுக்கு உன்னருகில் இடமா? மக்கள் இவனிடம் விபூதி வாங்கிப் பூசிக் கொள்ள வேண்டுமா? அவன் பூசை செய்து தருவதா பிரசாதம்? என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாயே! என்று நான் ஆதங்கப்பட்டு நிற்க, என்னருகில் சுய நினைவிழந்து மயங்கிச் சரிந்து கொண்டிருந்தாள் விஜி.

 பி. வித்யா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.