இனி குப்பைகளை அகற்றவும் கட்டணம்!


வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இனி குப்பைகளைச் சேகரிக்கும் போது கட்டணம் வசூலிக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


சென்னையை பொறுத்தவரைக் குப்பைகளை வழங்கும் போதே அதனைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி வந்தது. இருப்பினும் மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில்லை. இந்நிலையில் சென்னையில் உள்ள வீடுகள், நட்சத்திர ஹோட்டல்கள், தனியார் பள்ளிகள், வணிக வளாகங்கள் என அனைத்திலும் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி இனி வரி வசூலிக்க முடிவு செய்துள்ளது.

சென்னையில் மருத்துவமனையின் கழிவுகள், வணிக வளாகங்களின் கழிவுகள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள், என பல இடங்களிலிருந்து மாநகராட்சியின் சார்பாக ஒரு நாளைக்கு 5000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் குப்பைக்கிடங்குகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பை உரம்,எரிவாயு தயாரிக்கப் பயன்படுகிறது. மக்கா குப்பை மீண்டும் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மக்கள் குப்பைகளை வழங்கும் போதே தரம் பிரித்து வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் மக்களால் அது கடைப்பிடிக்கப்படாததால், திட மேலாண்மை விதிகளைக் கடுமையாக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்குத் தமிழக அரசும் ஒத்துழைப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, குப்பைகளை சேகரிக்கக் குறிப்பிட்ட தொகையினை நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும், வீடுகளுக்கு 10 முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படும். வணிக வளாகங்களை பொறுத்தவரை 1000 முதல் 5000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நட்சத்திர விடுதிகளுக்கு 300 முதல் 3000 ரூபாய் வரையும், தியேட்டர்களுக்கு 750 முதல் 2000 ரூபாய் வரையும், அரசு அலுவலகங்களுக்கு 300 முதல் 3000 ரூபாய் எனவும், கடைகளுக்கு 500 முதல் 1000 ரூபாய் எனவும்,மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு 2000 முதல் 4000 ரூபாய் எனவும் சென்னை மாநகராட்சி கட்டணம் நிர்ணயித்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு 500 முதல் 3000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேப் போல் பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளால் ஏற்படும் குப்பைகளுக்கு 5000 முதல் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளது.

இந்த விதிகளை மீறுவோர்க்கு , இனி அதற்கென்று தனியாக அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

குப்பை தொட்டிகளில் குப்பை கொட்டாமல் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அதற்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல் மக்கள் இனி குப்பையினை மக்கும் குப்பை , மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்கவில்லை எனில் அதற்கு 100 முதல் 5000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். குப்பைகளை எரித்தால் 500 முதல் 2000 ரூபாய் எனவும், கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் 2000 முதல் 5000 ரூபாய் வரையிலும் அபராதம் வசூலிக்கப்பட்டும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் அதற்கு 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட விதிகள் அனைத்தும் இன்னும் மூன்று மாதத்தில் அமலுக்கு வரும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.