பெரியார் சிலை சேதம்: டிஜிபி எச்சரிக்கை!

பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.



காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகேயுள்ள கலியப்பேட்டையில் 1998ஆம் ஆண்டு தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டு, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 23) இரவு பெரியார் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துவிட்டு தப்பியுள்ளனர். அதில், சிலையின் முகம் மற்றும் கை பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. சேதமடைந்த பெரியார் சிலை வெள்ளை துணியைக் கொண்டு மூடிவைக்கப்பட்டது.

சேலத்தில் 1971ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில், அதற்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சிலை உடைப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சிலை உடைப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 95 வயது வரை இந்த தமிழினத்துக்காக பாடுபட்ட தலைவர் தந்தை பெரியார். அவரது சிலையை சேதப்படுத்துவது என்பது வேதனைக்குரியது. கடும் கண்டனத்துக்குரியது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் செய்யப்பட்டுள்ள இந்த வெறுப்புச் செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “இது ஒரு சாராரின் வக்கிர உணர்வையே வெளிப்படுத்துகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தால், அதை கொள்கைகள் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டும். மாறாக, பெரியாரின் சிலைகளை சேதப்படுத்துவது, அவமதிப்பது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய செயல்களால் தந்தை பெரியாரை எவராலும் சிறுமைப்படுத்த முடியாது. மாறாக, இதை செய்தவர்கள் தான் சிறுமைப்பட்டு போவார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், “ இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில், சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சமீப காலமாக அரங்கேறி வரும் இத்தகைய நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.