ஷ்ரேயாஸ் அசத்தல்!


இந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி, இன்று(24.01.2020) நியூசிலாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக அமைந்த இந்த மைதானம், பவுலர்களுக்கு கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டதாகவே தெரிந்தது.


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது, நியூசிலாந்து அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மார்ட்டின் குப்தில்(30) மற்றும் கோலின் மன்ரோ(59) அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்தினார்கள். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை வெறும் 8 ஓவர்களிலேயே சேர்த்தனர்.

ஷிவம் டுபே வீசிய 8ஆவது ஓவரில் மார்ட்டின் குப்தில் சிக்ஸருக்கு அடித்த பந்தை, ரோஹித் ஷர்மா சிக்ஸ்ர் லைனிலிருந்து அபாரமான கேட்சை பிடித்தது, நியூசிலாந்து அணியின் ரன்-ரேட்டை கட்டுப்படுத்துவதற்கு உதவிகரமாகயிருந்தது.

12ஆவது ஓவரில் கோலின் மன்ரோ தாகூரின் பந்துவீச்சில் சாஹலிடம் கேட்சானதற்குப் பிறகு, நியூசிலாந்து அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. 13ஆவது ஓவரில் கிராண்டோம் டக் அவுட் ஆனதும் நியூசிலாந்து அணியின் ரன்-ரேட் வெகுவாக சரிந்தது. ஆனால் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டைலருடன் இணைந்து அதிரடி காட்டியதால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர், ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் உயர்ந்தது.

3ஆவது இடத்தில களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து சஹால் வீசிய 17 வது ஓவரில் விராட் கோலியிடம் கேட்சாகி பெவிலியன் திரும்பினார். இறுதிவரை களத்தில் நாட்-அவுட் பேட்ஸ்மேனாக இருந்த ராஸ் டைலர் 27 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்திருந்தது.

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா-.ராகுல் அதிரடி காட்டத்துவங்கியதும், அதிர்ச்சியளிக்கும் வகையில் ரோஹித் ஷர்மா 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதன்பிறகு இணைந்த கே.எல்.ராகுல்-விராட் கோலி ஜோடி 99 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல் 56 ரன்களுக்கு வெளியேற, விராட் கோலி பவுண்டரி நோக்கி அடித்த பந்தை மார்ட்டின் குப்தில் அபாரமான கேட்சை பிடித்து விராட் கோலியை பெவிலியன் அனுப்பினார்.

இந்திய அணி வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் நான்காவது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 58 ரன்களை எடுத்து, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

204 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 19 ஓவர்களிலேயே அடைந்து போட்டியை அபாரமாக வென்றது. சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். 200 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை இந்திய அணி இரண்டாவதாக களமிறங்கி முறியடிப்பது இதுவே மூன்றாவது முறை.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.