சசிகலா வெளியே வர வேண்டும்!!

சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் வெளியே வரவேண்டும் என்பது தான் எனது பிரார்த்தனை என்று பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  (ஜனவரி 25) தெரிவித்துள்ளார்.


சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை வெளியே கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். உரியத் தருணத்தில் அவர் வெளியே வருவார் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறி வருகிறார். வெளியே வந்தால் அவர் அதிமுகவில் இணையமாட்டார் என்றும் கூறி வருகிறார்.

இந்த சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்த அமைச்சர், ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜத்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

15 நிமிட இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, “சசிகலா விரைவில் வெளியே வரப் பிரார்த்தனை செய்தேன். அவர் வெளியே வரவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுக் காலம் வரை பயணித்தவர். ஜெயலலிதாவுக்குக் கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்ட போதெல்லாம் உடன் இருந்தவர். அவரை சிறையில் அடைத்திருப்பது வேதனை அளிக்கிறது. திமுகவின் பழிவாங்கும் செயலால் போடப்பட்ட வழக்கில் இன்று அவர் சிறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அம்மா இருந்திருந்தாலும் இதே நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கும். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், நீங்கள் ஆதரவு தெரிவிப்பது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”பெரியார் குறித்து ரஜினி தவறாக ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரைப் பெரியார் குறித்து ரஜினி பேசியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நடந்த நிகழ்வைத் தான் அவர் கூறினார். பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளட்டும், பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்துகொள்ளட்டும். ரஜினியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்றது” என்றார்.

மேலும். ஜீயருடனான இந்த சந்திப்பின் போது தற்போதைய சூழலில் நிலவும் பிரச்சினைகள் குறித்துப் பேசியதாகவும் குறிப்பிட்டார் ராஜேந்திர பாலாஜி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.