வைரஸால் முடங்கிய சீனா: இந்தியாவின் நிலை?

சீனாவின் வுஹான் நகரில் துவங்கி உலகெங்கும் பரவி வருகிறது கொரோனா வைரஸ். சீனாவில் மட்டும் 1280 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு, இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு வெளியே பல நாடுகளைச் சேர்ந்த 28 பேர் இந்த வைரஸிற்கு பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


உலக மக்கள் அனைவரையும் பயம்கொள்ள வைத்திருக்கும் இந்த வைரஸ் இதுவரை ஆஸ்திரேலியா, மலேசியா, நேபாளம், வியட்நாம், சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, தைவான், தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மக்களை பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் உள்ள விமான நிலையங்களில், சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயணிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுவரை கொரோனா வைரஸால் பாதிப்புகுள்ளானவர்கள் யாரும் இந்தியாவில் கண்டறிப்படவில்லை. எனினும் சீனாவிலிருந்து திரும்பியவர்கள் பரிசோதனைக்குப்பிறகே இந்தியாவினுள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சீனாவில் இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க, வுஹான் நகரத்தின் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது சீன அரசு. சீனாவிலிருந்து வெளியான சில வீடியோக்களில், திரைப்பட காட்சிகளை போல சாலையில் நிற்கும், நடக்கும் மனிதர்கள் அப்படியே கீழே விழுவது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அத்துடன் சீனாவில் மருத்துவம் படித்துவரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், வுஹானில் கடைகள் மற்றும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்ப்பட்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து வெளியேற முடியாமல் அவரும் சக மாணவர்களும் சிரமப்படுவதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் இந்தியா திரும்ப உதவுமாறு அவர்கள் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சம், இந்தியர்கள் யாரும் சீனா செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை” எனவும், “சீனாவிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் குறித்து கருத்து கூறியிருக்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், “அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போது, நோயின் வேகம் அதிகரிப்பது தெரியவந்திருக்கிறது. சீனா ஒரு மோசமான சூழ்நிலையில் இருப்பதால் அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.

நோய் குறித்த பல்வேறு தகவல்களும், அதனோடு வதந்திகளும் பரவி வரும் நிலையில், தெரிந்து கொள்ளவேண்டிய சில அடிப்படை தகவல்களை பார்க்கலாம்.

கொரோனா, பொதுவாக விலங்குகளைத் தாக்கும் ஒரு வைரஸ். சமயங்களில் மனிதர்களை தாக்கும் அளவுக்கு மாற்றமடைகிறது. ஏற்கனவே 2002ஆம் ஆண்டு சார்ஸ் நோயையும், 2012ஆம் ஆண்டு மெர்ஸ் நோயையும் இந்த வைரஸ் உருவாக்கியிருந்தது. ஆய்வாளர்களின் கருத்துப்படி, கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹானின் கடல் உணவு மார்கெட்டில் மனிதர்களை தாக்கத் துவங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. சார்ஸ் நோயுடன் சில ஒற்றுமைகளை கொண்டிருந்தாலும், இது முற்றிலும் புதிய வைரஸாகும்.

தற்போது கொரோனாவில் காணப்படும் புதிய இழை ஒன்று மனிதர்களுக்கு புதியது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை இந்த வைரஸிற்கு எந்தவிதமான மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் தீவிரத்தன்மையை குறைப்பதற்கு மட்டுமே இதுவரை மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதை குணப்படுத்தும் மருந்தோ அல்லது இதற்கான தடுப்பு மருந்தோ இதுவரை கண்டறியப்படவில்லை.

அறிகுறிகள்:

இந்த நோய் தாக்கியதற்கான அறிகுறிகளாக இருமல், தொண்டை வலி, தலைவலி, காய்ச்சல், குளிர் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல், வயிற்றுக்கடுப்பு ஆகியவை ஏற்படும். நோய் முற்றும் போது அதிக காய்ச்சலோ அல்லது சிறுநீரக செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டு மரணம் ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களை தொடுவதன் மூலமாகக்கூட இந்த நோய் பரவும். நோயாளியின் இருமல் அல்லது தும்மல் மூலம் காற்றில் இந்த நோய் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்:

1)கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பது, இதற்கான முதல் மற்றும் சிறந்த தடுப்பு முறையாகும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும், கழிவறைகளை உபயோகப்படுத்தும் போதும், நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளும்போதும் கைகளை கழுவுதல் அவசியம்.

2)கைகளை கண்களிலோ அல்லது மூக்கின் அருகிலோ கொண்டு செல்வதைத் தவிர்க்கவும்.

3)அதிக கூட்டமிருக்கும் பகுதிகளில் மாஸ்க் அணிந்து செல்வது நம்மை பாதுகாக்கும்.

4)நோயாளிகளையோ அல்லது அவர்களின் பொருட்களையோ நேரடியாக தொடுவதை தவிர்க்கவும்.

5)இருமல், தும்மலால் பாதிக்கப்பட்டிருந்தால் டிஷ்யூக்களை பயன்படுத்த வேண்டும்.

6)காய்கறிகளை கழுவி சமைக்கவும்.

7)உடற்பயிற்சியும் சரியான உணவுகளும், நல்ல தூக்கமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.