ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் - விசாரணைக்கு வலியுறுத்து!!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.


அண்மையில் மட்டக்களப்பு ஊடக மையத்தில் சில ஊடகவியலாளர்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் மூலம் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பிலிருந்து கொண்டு இங்கு நடைபெறும் விடயங்களை வெளி உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்ற செய்தியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள துண்டுப்பிரசுர அச்சுறுத்தல் மிகவும் தவறானதொரு விடயமாகும்.

அநாமதேயமாக துண்டுப்பிரசுரங்களை வீசி ஊடகவியலாளர்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கும் நசுக்குவதற்குமான முயற்சியாகவே அண்மைய மட்டு. ஊடக அமையத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் பார்க்கிறது.

பல்வேறு சிரமங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் மக்களுக்கு பிரதேசங்களில் நடைபெறுகின்ற விடயங்களை வெளிப்படுத்திவரும் வேளையில் அச்சுறுத்தல் செயற்பாடுகள் கவலையளிக்கின்ற ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பிலுள்ள செய்தியாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊடக சுதந்திரம் என்பது கேட்டுப் பெறவேண்டியதல்ல. இவ்வாறான செயற்பாடுகள் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே அமையும்.

ஊடகச் செயற்பாடுகளுக்கு பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும் என்று அனைவரும் கோரி வருகின்ற நிலையில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் உண்மையானதும் நேர்மையானதும் நடுநிலைமையானதுமான தகவல்கள் வெளிவருவதில் சிக்கலையே ஏற்படுத்தும்.

மட்டு. ஊடக அமையத்தில் வீசப்பட்டிருந்த அச்சுறுத்தல் துண்டுபிரசுரம் குறித்த பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற வேளையில், இவ்வாறான விடயங்கள் குறித்து பக்கச்சார்பற்றதும் சரியானதுமான விசாரணைகள் உடனடியாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்தப்படுவதுடன், தண்டனை வழங்கி ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.

அத்துடன், பொது மக்களின், சமூகத்தின் செய்திகளை வெளிப்படுத்தி வருகின்ற செய்தியாளர்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெறாமலிருப்பதற்கான நம்பிக்கையினையும் ஏற்படுத்துதல் வேண்டும்.

அதே நேரத்தில் பொது, சமூக அமைப்புக்களும் பொதுமக்களும் இது போன்ற விடயங்களில் குழப்பமடையாது ஊடக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஒத்துழைப்பினை வழங்குதல் வேண்டும்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.