எனக்கு ஏற்பட்ட நிலைமை கோட்டாவுக்கு ஏற்படக்கூடாது – மைத்திரி!

ஜனாதிபதியாக தான் பதவி வகித்தபோது, தனக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, அவருக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மகாவலி அபிவிருத்தி குறித்து இங்கு பலருக்குத் தெரியும். விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் மின்சார உற்பத்திற்காக இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட்டது. 30 வருடங்களில் செய்ய வேண்டிய இந்தத் திட்டம் 7 வருடங்களில் செய்து முடிக்கப்பட்டது.

இதேபோன்று நான்கு வருடங்களில் மேற்கொள்ள வேண்டிய மொரகாஹந்த திட்டத்தை நான் 3 வருடங்களில் செய்து முடித்தேன். எமது செயற்பாடுகளை வேகப்படுத்தும்போதுதான் அபிவிருத்திகளையும் வேகப்படுத்த முடியும்.

இவ்வாறான அபிவிருத்திகளுக்காக நாம் கோடிக்கணக்கான நிதியை செலவழித்துள்ளோம். எனினும், மக்கள் இதுதொடர்பாக எல்லாம் கதைப்பதில்லை.

மூளை சரியாக வேலை செய்யாதவர்கள்தான், என்னைப் பார்த்து என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். இதுகுறித்து நான் என்றும் கவலையடையப் போவதில்லை.

புத்தருக்கே கல்வீசிய இந்த உலகத்தில் எமக்கு இவ்வாறான விமர்சனங்கள் வருவது எல்லாம் பெரிய விடயமல்ல. இப்படியான சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். இதனை மாற்றியமைத்து புதிய அரசாங்கத்துடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

தனது அதிகாரங்களை தானே குறைத்த ஜனாதிபதியாக நான் தான் காணப்படுகிறேன். உலகில் எவரேனும் இப்படியான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளாரா? இல்லை.

எமது நாட்டின் 19 திருத்தச்சட்டங்களில் 12 திருத்தச்சட்டங்கள் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில்தான் கொண்டுவரப்பட்டன.

இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடையாது. இதனால், அவருக்கு எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளமுடியாது.

இதனால்தான் பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்கி, ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ளோம்.

எமது அரசாங்கத்தில் பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தமையால், என்னால் எதனையும் சுயாதீனமாக மேற்கொள்ள முடியாமல் போனது.

எனக்கு நேர்ந்தமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. இதுதான் எனது பிரதான நோக்கமாகும். பிளவடையாமல் சக்தி மிக்க அரசாங்கமொன்றை ஸ்தாபித்து பயணிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.