`உதவி கேட்க வந்த இடத்தில் மயங்கிவிழுந்த சிறுமி!' - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்!!

பள்ளிக்கூடம்கூட போகாமல் தன் தாயோடு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து உதவி கேட்க வந்த இடத்தில், பசியின் மயக்கத்தில் அந்தச் சிறுமி மயங்கிவிழுந்த சம்பவம் சேலம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


அங்கே இருந்தவர்கள் சிறுமியைத் தூக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து அமரவைத்து ஆறுதல்படுத்தினர். மயக்கத்திற்கான காரணத்தை அறிந்து, உணவு ஊட்டிய பிறகே பசி மயக்கம் தெளிந்து, சிறுமி அழத் தொடங்கினாள்.

அந்தச் சிறுமியின் தாயிடம் பேசினோம். ``என் பேரு லட்சுமி. எங்க வீட்டுக்காரர் பெயர் பூபதிராஜா. எங்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் சாமுவேல் என்ற பையனும், 4-ம் வகுப்பு படிக்கும் சுமதி என்ற இந்த மகளும் இருக்கிறார்கள். நாங்கள் சேலம் குகை அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் குடியிருக்கிறோம். எங்க வீட்டுக்காரர் பூபதிராஜா துணிக்கடைக்கு வேலைக்கு போயிட்டு இருந்தார். திடீரென இரண்டு வருடத்திற்கு முன்பு உடம்பெல்லாம் கொப்பளம் வந்து இறந்துட்டார்.

ரெண்டு வருஷமா லைன் மேடு, குகை பகுதியில் மூணு வீட்டுல பத்து பாத்திரம் தேச்சு என் குழந்தைகளைப் படிக்க வச்சிட்டு இருக்கிறேன். ஒரு வீட்டுல 500 ரூபாயும், இன்னொரு வீட்டுல 800 ரூபாயும், இன்னொரு வீட்டுல 1,000 ரூபாய்னு மாசம் 2,300 ரூபா கிடைக்குது. இதுல வீட்டு வாடகை, கரென்ட் பில், சாப்பாட்டு செலவுக்கே பத்தும் பத்தாமலும் இருக்கு.

எனக்கு அப்பா அம்மா இல்ல. கூடப் பிறந்தவங்களும் உதவி செய்ற அளவுக்கு வசதி இல்லை. அதனால கடந்த ரெண்டு வருஷமா நாய் படாத பாடுபட்டு என் குழந்தைகளைக் காப்பாற்றி வர்றேன். அரசாங்கம் எனக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்தா, என் குழந்தைகளைப் படிக்கவச்சி ஆளாக்கி டுவேன். நானும் ரெண்டு வருஷமா உதவித்தொகை கேட்டு மணியனூர்ல உள்ள தாலுகா அலுவலகத்துல போய் கெஞ்சிப் பார்த்துட்டேன். ஏன்... என்னன்னுகூட ஏறெடுத்துப் பார்க்கல.

கலெக்டர் ஐயாவைப் பார்த்தா காரியம் நடக்கும்னு சொன்னாங்க. நான் வேலை செய்யுற இடத்துல ஒரு பாட்டிக்கு உடம்புக்கு ரொம்ப முடியல. அதனால நேத்து இரவு 11மணிக்கு தான் வீட்டுக்கு வந்தேன். குழந்தைகள் சாப்பிடாம தூங்கிட்டாங்க. காலையில கலெக்டர் ஐயாவைப் பார்க்க வந்ததால, சாப்பாடு செய்யல. குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகாமல் என்கூட வந்துட்டாங்க. சத்தியமா சொல்றேன், ரேஷன் அரிசி வாங்கி சாப்பிடக்கூட வசதி இல்லை. அரசாங்கம் கொஞ்சம் கருணை காட்டி எனக்கு உதவித்தொகை கொடுத்தா, என் குழந்தைகளை முன்னுக்குக் கொண்டுவந்துடுவேன்'' என்று கண்ணீருடன் கூறினார். இவரது வறுமையைத் துடைக்குமா தமிழக அரசு.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.