கர்ணன் இடது கையால் தானம் கொடுத்தது ஏன்!!

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று
போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை.

அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால்
குற்றுயிராக கர்ணன் போர்க்களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன்
உடலிலிருந்து உயிர் போகவிடாமல் காத்து நின்றன.

இதைக் கண்ட கண்ணன், “நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்து விடு ,” என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்து, கொட்டும் செங்குருதியில் அவன்
செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன்.

இவ்வளவு சிறந்த கொடையாளியான கர்ணனின் வாழ்க்கையில் நடந்த ஒரு
நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கர்ணன் கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுகத்
தயாராகிக் கொண்டிருக்கிறான்.

இடதுகையில் வைத்துக்கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து
உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம்
தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில்
ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.
அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன்
என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க
வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா?

கர்ணன் சிரித்துக் கொண்டே தெளிவாகப் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான்.
வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான்
இடக்கையிலிருந்து வலக்கைக்கு கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு
நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில்
தான் இடது கையாலேயே கொடுத்து விட்டேன் என்றான்.

மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய்.
வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது
ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்...

தமிழரசி.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.