உங்கள் சிந்தனைக்கு சில வரிகள்!!

இலக்கிய உலகென்பது இன்று பரந்து விரிந்து செல்கின்றது. கவிதைகளும் கட்டுரைகளும் சிறுகதைகளும், புதினங்களும்  தொகுப்புகளாக மலர்ந்து தமிழ்த்தாயின் கழுத்தில் மாலைகளாய் அலங்கரித்த வண்ணமே உள்ளன. சமகால எழுத்துக்கள் நாளைய உலகிற்கு சேதி சொல்லப் போகின்றன என்பது நிச்சயம்.


படைப்புகள் அவசியமானவை. அதிலும் காலத்திற்கேற்ப உருவாக்கப்படும் படைப்புகள் என்பவை கொண்டாடத் தக்கவை. பாராட்டிற்குரியவை. ஆனால்  படைப்புகளைப் படைத்துவிட்டோம் என்பதற்காக தம்மைத் தாமே பட்டங்களால் அலங்கரிப்பதென்பது மிகத்தவறான ஒன்றாகும்.

இன்றைய காலத்தில் இவ்விடயம் இளையோரிடத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு விடயமாகும். பட்டங்களையும் பதவிகளையும் நமக்கு நாமேயோ அல்லது நாம் எமது நட்புக்களுக்கோ கொடுப்பதால் நன்மைகள் ஏதுமில்லை. பட்டங்கள் என்பவை அறிவு முதிர்ச்சியின், ஆளுமை நிறைவின், அனுபவ நிமிர்வின் வெளிப்பாடு. ஒரு தொகுப்பைப் புத்தகமாக வெளியிட்டபின் அவர்களை கவிஞர்கள் எனப்பட்டம் சூட்டி அவர்களின் மனதிலும் மூளையிலும் தேவையற்ற மமதையை உண்டுபண்ணி விடுவதால் அவர்களின் தேடலும் ஆற்றலும் மழுங்கடிக்கப்பட்டுவிடுகிறது.

அடர்ந்த திறனும் அனுபவ முதிர்ச்சியுமே மனிதனைப் புடம் போடுகின்றது. இவை இரண்டையும் வளர்த்துக் கொண்டாலன்றி வேறெதனாலும் பட்டங்களை நிர்ணயம் செய்யமுடியாது.
இன்றெழுதி நாளை வெளியீடு செய்து மறுநாள் பெயருக்கு முன்னால் இலக்கியப் பட்டங்களைச் சுமப்பது என்பது நாகரீகமாக மாறியுள்ளது தற்போது. நின்று நிதானிக்காத, பொறுமையாய் ஆராயாத எந்த விடயமும்  சிறப்பாக அமையாது.

தற்காலத்தில் படைப்புகள் பல்கிப் பெருகுவது மிக அற்புதமான விடயமே. ஆனால் படைப்புகளின்; தரத்தினை மெருகேற்றவதும் சிறப்படையவைப்பதும் படைப்பாளிகள் ஒவ்வொருவரினதும் கையில் உள்ள விடயம். அதனை யாராலும் மறுக்கமுடியாது. ஆழ்ந்த வாசிப்பும் நீண்ட தேடலும் தான் படைப்புகளுக்கு உரமூட்டும். முதலில் படைப்புகளை செம்மைப்டுத்தவேண்டும். அதன் பின்னரே பட்டங்களைப்பற்றி யோசிக்கவேண்டும். எழுத்து என்பது ஒரு தவம். அது சீரிய நோக்கோடு இருக்கவேண்டும்.


பட்டங்களை அடைந்துவிடவேண்டும் என ஆசைப்பட்டு எழுத எண்ணாதீர்கள். எழுதுங்கள், நிறைய எழுதுங்கள், நல்லவற்றை, சமூகநோக்கோடு கூடியவற்றை எழுதுங்கள், காலம் பட்டங்களையும் புகழையும் தானாகவே பரிசளிக்கும்.

கோபிகை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.