விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் டீசர்!
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ தெலுங்கு திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி, டியர் காம்ரேட் திரைப்படங்கள் மூலமாகத் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவரது நடிப்பில் வெளியாகவுள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தில் சீனய்யா, கௌதம், ஸ்ரீனு என மூன்று கதாபாத்திரங்களில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா, கேத்ரீன் தெரஸா, இஸபெல்லா போன்றோர் நடித்துள்ளனர்.
கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை கிரந்தி மாதவ் எழுதி, இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். ஆந்தாலஜி வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் டீசர் இன்று (ஜனவரி 3) வெளியாகியுள்ளது. அந்த டீசரில் வித்தியாசமான வெவ்வேறு தோற்றங்களில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
ஆந்தாலஜி என்பது பல குறுங்கதைகளின் கதம்பமாக இருக்கும். அந்தக் கதைகள் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்புடனோ அல்லது தொடர்பு இல்லாமலோ இருக்கலாம். தமிழில் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இதே வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் நான்கு குறுங்கதைகளில் வெவ்வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் சோலோ என்னும் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆந்தாலஜி வகையில் எடுக்கப்பட்டிருந்த அந்தத் திரைப்படத்தில் நான்கு குறுங்கதைகள் இடம்பெற்றிருக்கும். நான்கு கதைகளிலும் வெவ்வேறு கதாபாத்திரமாக துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
அதே பாணியில் தற்போது வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை